கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பம் குறித்து தவறான தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்ததற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு, தன் குழந்தைகளுடன் சுகாதாரத்துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அமைச்சர் கருணை காட்டவில்லை. மக்கள் உயிரைக் காப்பாற்ற போராடி மாண்ட மருத்துவரின் குடும்பம், நிவாரணம் மற்றும் அரசு வேலை கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டது தமிழகத்தில் மட்டும்தான் நடந்துள்ளது. ஆனாலும், அமைச்சர் மனம் இரங்கவில்லை.
வேறுவழியின்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நீதி கிடைக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். ஆனால், கரோனாவில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்தை கண்டுகொள்வதில்லை.
முதல்வர் தலையிடவேண்டும்: மறைந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தரப்படாதது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு, சுகாதாரத் துறை அமைச்சர், விவேகானந்தனுக்கு 2 மனைவிகள் எனவும், குடும்பத்துக்குள் பிரச்சினை உள்ளது என்றும் சம்பந்தமே இல்லாத தவறான தகவலை தெரிவித்ததுள்ளார். இது அதிர்ச்சியாக உள்ளது.
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே முதல்வர் உடனடியாக தலையிட்டு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை தன் கைகளால் வழங்க வேண்டுகிறோம்.
மேலும், முதல்வர் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா மற்றும் குழந்தைகள் உடன் இருந்தனர்.














