Home சினிமா செய்திகள் “திரைத் துறையில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு” – இயக்குநர் ஹரிஹரன் ஆதங்கம்

“திரைத் துறையில் எழுத்தாளர்கள் புறக்கணிப்பு” – இயக்குநர் ஹரிஹரன் ஆதங்கம்

0

“நூற்றுக்கணக்கான தலைசிறந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களின் எழுத்துகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. திரைத்துறையில் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்தார்.

புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 3-வது உலக திரைப்பட விழா, புதுச்சேரியில் இன்று தொடங்கியது. அலையன்ஸ் பிரான்சிஸ் கருத்தரங்கு கூடத்தில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் ஹரிஹரன் விழாவைத்  தொடங்கி வைத்து பேசியது: “திரைப்படம்  நம்மை ஈர்த்துள்ளது. அது நம்மை மெய்மறக்கச் செய்துள்ளது. அது நம்மை விழுங்கிவிட்டது. அந்த 3 மணி நேரத்தில் இவையெல்லாம் நிஜமாகவே நடப்பது போல நாம் சினிமா பார்க்கிறோம். இதுதான் சினிமாவின் சக்தி, ஏன் சினிமாக்கள் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் செழித்து வளர்கின்றன?

உலகின் அதிக திரைப்படங்கள் தயாரிக்கும் இரண்டு மிகப்பெரிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இந்தியா. இதே அளவுக்கு சக்தி வாய்ந்த மூன்றாவது நாடு ஒன்று உள்ளது. ஆனால் அதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அது நைஜீரியா என்ற நாடு. நைஜீரியா நிறைய திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அது ஒரு வித்தியாசமான பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.

ஜனநாயகம்  செல்லுபடியாகும், செயல்பாட்டில் இருக்கும் நாடுகளில் மட்டுமே சினிமா நடப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், மிகவும் மாறுபட்ட பின்னணியில் இருந்து வரும் மக்களால் அது உருவாக்கப்படுகிறது. திரைப்படம் என்பது ஒரு ஜனநாயகச் செயல்பாடாக அமைந்துள்ளது.

ஆனால், திரைப்படத்தில் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான தலைசிறந்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர். அவர்களின் எழுத்துகளை திரைப்படத்தில் பயன்படுத்துவதில்லை. ஒருவரே எப்படி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை கவனிக்க முடியும்? தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த நிலைதான் இருக்கிறது. ஆனால் திரைப்படமும் இலக்கியமும் இணைந்துதான் பயணிக்க வேண்டும்.

திரைப்பட விழாக்கள் ஒரு படம், நல்லது அல்லது கெட்டது என்று தீர்ப்பு வழங்கும் இடமில்லை. அவை நம்மை போன்ற மற்ற கலாச்சாரங்களை திறந்த மனதுடன் புரிந்து கொள்வதற்கும், கற்று கொள்வதற்குமான கல்விக்கூடம். யதார்த்ததுடனான ஒரு நவீன தொடர்பே சினிமா. முறையான திரைக்கல்வி இல்லாமலேயே எவரும் ரசிக்கக்கூடிய மற்றும் உருவாக்கக்கூடிய தனித்துவமான கலை வடிவம் சினிமா’ என்று கூறினார்.

பின்னர் ’தி ஸ்டேஞ்சர்’ என்கிற பிரெஞ்சு மொழி படம் திரையிடப்பட்டது.

இன்று தொடங்கி 9-ம் தேதி வரை நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் 3 நாள்களில் பிரெஞ்ச், ஜெர்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளின் விருது பெற்ற படங்கள் திரையிடப்படுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version