ஷார்ஜா: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா மோஸ்ட்ரி 38 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களும் ஷாதி ராணி 32 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் சேர்த்தனர்.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் சசிகா ஹார்லே 3 விக்கெட்களை வீழ்த்தினார். 120 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனையான சாரா பிரைஸ் 52 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 49 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கேப்டன் கேத்ரின் பிரைஸ் 11, அலிசா லிஸ்டர் 11 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரிது மோனா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முழுமையாக 2 புள்ளிகளை பெற்றது. அந்த அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (5-ம் தேதி) இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. ஸ்காட்லாந்து அணி தனது அடுத்த ஆட்டத்தில் 6-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளை சந்திக்கிறது.