பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (50). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த குறுஞ்செய்தியும் வராததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதியுள்ளார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜூலை 25-ம் தேதி நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளார். மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், “உங்களுக்கு 2 ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கை சரிபாருங்கள்” எனக் கூறினர்.
இதையடுத்து, கிணத்துக்கடவு பரோடா வங்கியில் மகேஸ்வரி விசாரித்தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்குக்கு மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு தாலுகா சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பானுமதி கூறும்போது “மகளிர் உரிமைத்தொகை சென்னையில் இருந்து பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. மகேஸ்வரியின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.