நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஹீரோவாக பெரும்பாலான படங்களில் நடித்திருந்தாலும், திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் என சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். அந்த படங்களிலும் அவர் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது. அவர் வில்லத்தனமான கேரக்டர்களில் நடித்த படங்களின் லிஸ்டில் ‘பெண்ணின் பெருமை’யும் பெருமையாக இருக்கிறது.
மணிலால் பானர்ஜி எழுதிய பெங்காலி நாவலான ‘ஸ்வயம்சித்தா’வை ‘அர்தங்கி’ என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார், இயக்குநர் பி.புல்லையா . நாகேஸ்வராவ், சாவித்ரி, சாந்தகுமாரி, ஜக்கையா நடித்த இந்தப் படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை அடுத்து தமிழிலும் இயக்க முடிவு செய்தார், புல்லையா.
இதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு என பலர் நடித்தனர். ஜெமினியும் சிவாஜியும் முதன் முறையாக இணைந்து நடித்த படம் இது. தனது ராகினி பிக்சர்ஸ் சார்பில் புல்லையாவே தயாரித்தார். படத்தின் வசனம் மற்றும் பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதினார். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைக்க, பின்னணி இசையை மாஸ்டர் வேணு அமைத்திருந்தார்.
ஜமீனின் முதல் மனைவின் மகன் ரகு, மனநிலை சரியில்லாதவர். அவரை பைத்தியம் என்று துன்புறுத்துகிறார், இரண்டாம் தாரத்து மகன் நாகு. ஜமீனையே எதிர்த்து கேள்விகேட்கும் விவசாயி மகளான பத்மாவை, ரகுவுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் ஜமீன். அவர், ரகுவை குணமாக்குகிறார். இதனால் குடும்ப பொறுப்புகளை ரகுவிடம் கொடுக்கிறார் ஜமீன். பண ஆசை கொண்ட நாகுவுக்கு அதை ஏற்கமுடியவில்லை. தனது தாயின் துணையுடன் தந்தையுடன் மோதுகிறார். அவர்களுக்கு பத்மா என்ன மாதிரியான பாடம் கற்பிக்கிறார் என்று கதை செல்லும்.
இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் சிவாஜி கணேசன் நாகுவாக, ஸ்டைலான தோற்றத்தில் இருப்பார். வழக்கம் போல நடிப்பிலும் துடிப்புடன் மிரட்டியிருப்பார். ஜெமினி, சாவித்திரி ஆகியோரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
இதில் இடம்பெற்ற ‘அழுவதா இல்லை சிரிப்பதா’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய முதல் பாடல். ‘பசி’ துரை, இயக்குநர் ஆகும் முன் இந்தப் படத்துக்கு சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றி இருக்கிறார்.