மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷா, பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஸியை தொடர்புபடுத்தி தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் வலுத்ததால் அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஹரியானாவின் பிவானி நகரில் நடைபெற்ற மராட்டிய ராணி அகில்யாபாய் ஹோல்கர் 300-வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலங்களவை எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பேசியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் போது கணவர்களை இழந்த பெண்களுக்கு போராடும் குணம் இல்லை.
சுற்றுலா பயணிகள் அக்னிவீரர்கள் போன்ற பயிற்சியை பெற்றிருந்தால், 3 தீவிரவாதிகளால் 26 பேரை சுட்டுக் கொன்றிருக்க முடியாது. சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளுடன் போராடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும்.
ராணி அகில்யாபாய் ஹோல்கர், ராணி லட்சுமிபாய் ஆகியோரும் பெண்கள்தான். அவர்கள் எல்லாம் போராடவில்லையா? நமது சகோதரிகள் தைரியமாகவும், வீரத்துடனும் வாழ வேண்டும். இவ்வாறு எம்.பி.ராம் சந்தர் ஜங்ரா பேசினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.