வித் லவ்: திரைப் பார்வை – சொல்ல மறந்த காதலின் குண்டூசி வளைவு!

0
16

கடந்த காலத்தில் உணர்ந்து கடந்து வந்த காதலை, நிகழ்காலத்தில் அசைபோட்டுப் பார்க்கும் படங்களைக் காண்பது எப்போதும் ஜீலீர் அனுபவம். காதல் என்கிற சாகா உணர்வை அசைத்துப் பார்க்கும் விதமாக, ஒரு மீள் சந்திப்பில் உணர்வுபூர்வமான மோதலை அதனோடு நிகழ்த்தும் கதைக் களம் கொண்ட படங்கள், சி.வி.ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’ படக் காலத்திலிருந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.

80கள் தலைமுறையின் பள்ளிக் காதல் வாழ்க்கையை ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படமும், 90கள் தலைமுறையின் காதல் மீள் சந்திப்பை பிரேம்குமாரின் ‘96’ படமும், 2கே தலைமுறையின் காதல் சாகச விளையாட்டுகளின் விளைவை கே.ஜே.சுரேந்தரின் ‘மாய பிம்பம்’ படமும் உணர்வும் உயிரும் குன்றாமல் நமக்குப் படையல் வைத்தன.

இதுபோன்ற காதல் திரைப்படங்கள் பெரும்பாலும் இரண்டு வகையில் முகம் காட்டுபவை. ஒன்று காதலில் உருகி உருகி உணர்ச்சி மிகையால் துயருறும் மெலோடிராமாக்கள். அதைவிட்டால் காதலித்த காலத்திலும் மீள் சந்திப்பின்போதும் நிகழும் சம்பவங்களில் இயல்பாகக் கவியும் நகைச்சுவையைத் தோய்த்துச் சித்தரிக்க முயலும் மென்மையான ‘ரோம்காம்’ வகை.

இவற்றுடன் பெரும் திருப்பங்களோ, அதிர்வூட்டும் தருணங்களோ இல்லாமல் (மாய பிம்பம் அதிர்வூட்டும் திருப்பம் கொண்டது), மனித மனத்தின் மென்மையான பக்கங்களை மட்டும் நிதானமாகத் தொட்டுத் திறக்கும் இன்னொரு துணை வகையும் உண்டு. ‘வித் லவ்’ படத்தை அந்த ஆர்ப்பாட்டமில்லாத வகையில் சேர்க்கலாம்.

சென்னையில் கிராஃபிக் டிசைன் வடிவமைப்பாளராக இருக்கிறான் சத்யா (அபிஷன் ஜீவிந்த்). அவனுக்குப் பெண் பார்த்து திருமணம் முடிக்க, இணையத் திருமணம் தளம் வழியாக அவனுடைய அக்காவால் ‘விருப்பம்’ தெரிவிக்கப்பட்ட மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) காபி ஹவுஸ் ஒன்றில் சந்திக்கிறான்.

சமூக ஊடகப் பிரபலமாக இருக்கும் மோனிஷாவும் சத்யாவும் திருச்சியில் ஒரே தனியார்ப் பள்ளியில் படித்தவர்கள் என்பது அவர்களது உரையாடல் வழியாகத் தெரியவருகிறது. இருவரும் தங்கள் பள்ளி நாள்களில் வெவ்வேறு சக மாணவர்களை ஒருதலையாகக் காதலித்த நினைவுகளைப் பரஸ்பரம் பகிர்ந்து நினைவு கூர்கிறார்கள். அப்போது, மோனிஷா, ‘நம் இருவருடைய முன்னாள் காதலர்களையும் தேடிப்பிடித்துச் சந்தித்து, அப்போது வெளிப்படுத்த முடியாமல் போன காதலை இப்போது வெளிப்படுத்தி நம் மனதைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

அதன்பிறகு நாம் வாழ்க்கையில் இணைவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்’ என்கிறாள். முதலில் இதை ஏற்க மறுக்கும் சத்யா, பிறகு ஒப்புக்கொள்கிறான். இந்தப் புதிய, உணர்ச்சிகரமான காதல் மீள் தெளிதல் பயணத்தின் வழியே அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா? குறிப்பாகக் காதலின் முழுமை எதிலிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார்களா என்பது கதை.

தொடக்கம், இடைவேளை முடிச்சு, முடிவை நோக்கிய பயணம் என்கிற திரைக்கதையின் வடிவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும், படம் மெதுவாக ஊர்கிறது. அதற்குத் திரைக்கதைக்குள் வழிந்து திணிக்கப்பட்டதால் பிதுங்கும் ஏகப்பட்ட ஊளைச்சதை காட்சிகள் காரணமாக இருக்கின்றன. பல படங்களில் பார்த்துச் சலித்த பள்ளிக்கால நிகழ்வுகள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன.

ஆறுதலாக, காதலைச் சொல்ல முடியாமல் போய்விடும் இடங்கள் மட்டும் ‘கணெக்ட்’ செய்துகொள்ளும் உணர்வைத் தருகின்றன. அதேபோல் காதலர்களைத் தற்போது மீண்டும் சந்திக்கும் காட்சிகளும் தலை தப்பித்துவிடுகின்றன. சத்யா – மோனிஷா இடையிலான உரையாடல்கள் செயற்கையாகத் தெரியாமல், தற்காலத் தலைமுறையின் உலகை விரிப்பதும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

ஆனால், பள்ளி ஆசிரியர் சாமிநாதன் (பருத்தி வீரன் சரவணன்), சத்யாவின் அப்பாவுடைய தொழில் நஷ்டப் பிரச்சினை, சத்யாவின் புகை மற்றும் குடி ஆகியன திரைக்கதையில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் போதிய அழுத்தம் இல்லாததால் பார்வையாளரது உணர்ச்சியின் ஆழத்தைத் தொடமுடியாமல் போய்விடுகிறது.

திரை அனுபவம் துண்டுத் துண்டாகக் கிடைக்கும் இந்தச் சிக்கலுக்கு எழுத்தாளர் மதன் மேலோட்டமாக சம்பவங்களையும் துணைக் கதாபாத்திரங்களையும் அணுகியிருப்பதே காரணம். தனது திரைக்கதையை நல்ல திரைக்கதை எழுத்தாளர்களை வைத்துச் செப்பனிட்டிருந்தால் இந்தப் படம் மேலே கூறப்பட்ட படங்களின் வரிசையில் இடம்பெறும் தகுதியைப் பெற்றிருக்கும்.

சத்யாவாக வரும் அபிஷன் ஜீவிந்த் பெரும்பாலான காட்சிகளில் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அடக்கமான முகபாவனைகள், தன் மனதோடு பேசித் துன்புறும் இளைஞனின் ’மைண்ட் வாய்ஸ்’ மனநிலை ஆகியவற்றை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அபிஷந்த் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும்விதமாக அவரை நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார் மோனிஷாவாக வரும் அனஸ்வரா ராஜன்.

தன்னம்பிக்கை, குறும்பு, பொதுச் சமூகத்தை எதிர்கொள்வதில் காட்டும் துணிவு என ஜென் இசட் தலைமுறை பெண்ணை தன் துடிப்பான நடிப்பால் கண்முன் நிறுத்துகிறார் அனஸ்வரா ராஜன். தெற்றுப் பல் சிரிப்புடன் அனிஷாவாக வரும் காவ்யா அனில் நடிப்பும் அட்டகாசம்!

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்குத் துள்ளலும் ரம்மியமும் கலந்த வண்ணத்தைக் குழைத்துப் பூசியிருக்கின்றன. ஸ்ரீரெயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, திருச்சிராப்பள்ளியின் பள்ளிக்கால நினைவுகளையும், நிகழ்காலப் பயணத் தருணங்களையும் நமக்கு நெருக்கமாகக் காட்டிவிடுகிறது.

ஆழமான திரை அனுபவம் தரும் காதல் மீட்சிப் படத்தை எதிர்பார்த்துச் செல்லாமல் ஒரு ஃபீல்குட் நகைச்சுவை காதல் படத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றம் அளிக்காது. வேகமும் பரபரப்பும் நிறைந்த கதையோட்டத்தையும் ஆழமும் அதிர்வும் தரும் சம்பவங்களையும் எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்த ‘வித் லவ்’ படத்தின் வேகம் பத்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here