ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றால், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா எஃப்சி அணியை இரு முறை வீழ்த்தி சாதனை படைக்கலாம். கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அந்த அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
சென்னையின் எஃப்சி 14 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஒடிசா எஃப்சி அணி 14 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
செர்ஜியோ லோபெரா பயிற்சியாளராக உள்ள ஒடிசா எஃப்சி அணி இந்த சீசனில் இதுவரை 27 கோல்களை அடித்து அசத்தி உள்ளது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி அணி 19 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. ஒடிசா அணியில் டியாகோ மவுரிசியோ 7 கோல்களையும், சென்னையின் எஃப்சி அணியில் வில்மர் ஜோர்டான் கில் 6 கோல்களையும் அடித்துள்ளனர். இந்திய வீரர்களில் ஜெர்ரி மாவிஹ்மிங்தங்கா, இர்பான் யத்வாட் ஆகியோர் தலா மூன்று முறை கோல் அடித்துள்ளனர்.
சென்னையின் எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், சென்னையின் எஃப்சி 4 ஆட்டங்களிலும், ஒடிசா எஃப்சி 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.














