ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டங்களையும் ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடி இருந்தது. தற்போது நடப்பு சீசனில் முதன்முறையாக வெளியே சென்று விளையாட உள்ளது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தனர். அதிலும் டிம் டேவிட் 24 பந்துகளில் 70 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். டாப் ஆர்டரில் பில் சால்ட், விராட் கோலியும் உரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜேக்கப் டஃபி பலம் சேர்த்து வருகிறார். நடு ஓவர்களில் கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோர் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியையும், 2-வது ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வீழ்த்தியிருந்தது ராஜஸ்தான் அணி.
கடைசியாக மழையால் பாதிக்கப்பட்டு 11 ஓவர்களாக நடத்தப்பட்ட மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றியை வசப்படுத்தியிருந்தது. பேட்டிங்கில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் சூர்யவன்ஷி, மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இன்றைய ஆட்டத்திலும் அவர், ஆர்சிபி பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். இதேபோன்று கடந்த ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வாலிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய் ஆகியோர் பலம் சேர்த்து வருகின்றனர். இவர்கள், ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.














