இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், ராஜபாளையத்துக்கு அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கோபால்சாமி அதை அறிவிக்கும் முன்பாகவே தொகுதிக்குள் ஆதரவு திரட்ட ஆரம்பித்துவிட்டார்.
கடந்த 2011-ல் ராஜபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.வாக இருந்த கோபால்சாமி இப்போது பாஜகவில் இருக்கிறார்.
நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான இவருக்கு, அவரது சிபாரிசிலேயே பாஜக மாநிலத் துணைத் தலைவர் பதவி வாய்த்ததாகச் சொல்வார்கள். இந்த நிலையில், அதிமுக கூட்டணி உறுதியானதும் இரண்டு முறை ராஜபாளையத்துக்கு விசிட் அடித்த நயினார் நாகேந்திரன், கோபால்சாமி வீட்டில் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, தன்னை ராஜபாளையம் தொகுதி வேட்பாளராகவே பிரகடனம் செய்து கொண்டுவிட்ட கோபால்சாமி, இப்போது தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசி தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார். இவரது வருகையால் இம்முறை ராஜபாளையம் வேட்பாளரை மாற்றும் யோசனைக்கு திமுக தலைமை வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கான காரணங்களை அடுக்கிய திமுகவினர், “ராஜபாளையத்தின் இப்போதைய திமுக எம்எல்ஏ.வான தங்கபாண்டியன் கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
அதேசமயம், கோபால்சாமி 2011-ல் அதிமுகவின் அறிமுக வேட்பாளராக களமிறங்கிய போதே தங்கபாண்டியனை 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இப்போது அவருக்கு தொகுதி முழுவதும் நல்ல அறிமுகம் இருக்கிறது. அதனால் அவரை வீழ்த்துவது அத்தனை சுலபம் இல்லை. அதனால் இம்முறை தங்கபாண்டியனுக்குப் பதிலாக நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாமின் பெயரை கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி தலைமைக்கு சிபாரிசு செய்திருக்கிறார்.
ராஜபாளையம் நகரின் பிரதானப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நகராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருபவர் பவித்ரா ஷியாம். அதற்காகவே தமிழக அரசின் சிறந்த நகராட்சிக்கான விருதையும் அண்மையில் அவர் பெற்றார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவரான கோபால்சாமி, இந்தப் பகுதியில் உள்ள நாயுடு மற்றும் ராஜூக்கள் சமூகத்தினரின் வாக்குகளை கணிசமாக பெற்றே 2011-ல் வெற்றிக் கொடி நாட்டினார். பவித்ரா ஷியாம் ராஜூக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பெண் என்பதாலும் இம்முறை அந்தக் கணக்கு மாறும் எனக் கணக்குப் போடுகிறார் அண்ணாச்சி” என்றார்கள்.