சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை காலத்தின் முக்கியமான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) காலம் தற்போது நிலவுகிறது. மே மாதத்தில் தொடக்கம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதன்பிறகு, வெப்பச்சலனம் காரணமாக, சில இடங்களில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தாலும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், அடையாறு, பட்டினம்பாக்கம், மேடவாக்கம், தரமணி உள்பட பல இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த மழையால் சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பத்தை அனுபவித்து வந்த நிலையில், இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.