நான் ஏன் பிறந்தேன்: ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்…’

0
171

அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி நடித்து 1953-ல் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படம், ‘பிரத்துக்கு தெருவு’ (Bratuku Teruvu). இந்தப் படத்தை 1956-ம் ஆண்டு ‘பலே ராமன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். இதையடுத்து எல்.வி.பிரசாத் ‘ஜீனே கே ராத்’ என்ற பெயரில் இதை இந்தியில் ரீமேக் செய்தார். 1969-ல் வெளியான இதில் ஜிதேந்திரா, தனுஜா நடித்தனர்.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர் நடிப்பில் அப்படியே தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுதான் ‘நான் ஏன் பிறந்தேன்’. கே.ஆர்.விஜயா, காஞ்சனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன், ஜி.சகுந்தலா என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர் நடித்த ரிக்‌ஷாக்காரன், அன்னமிட்டகை, ஊருக்கு உழைப்பவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.கிருஷ்ணன், இந்தப்படத்தை இயக்கினார்.

தனது குடும்பம் கஷ்டத்தில் இருக்க, சென்னையில் வேலை தேடுகிறார், எம்.ஜி.ஆர். அவருக்கு அவருடைய நண்பரான கோபால கிருஷ்ணன் உதவியால் மேஜர் சுந்தர்ராஜனிடம் வேலை கிடைக்கிறது. திருமணமாகாதஒருவருக்குத்தான் அந்த வேலை என்ற நிலையில், தனக்கு திருமணம் ஆனதை பேசவிடாமல்எம்.ஜி.ஆரை வேலையை ஏற்க செய்கிறார் மேஜர்.

எம்.ஜி.ஆருக்கும் சொல்ல முடியாத நிலை. மேஜருக்கு ஒரு மகள். அவர் காஞ்சனா. அம்மா இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் வீல் சேரில் இருக்கும் அவர், எம்.ஜி.ஆரை ஒரு தலையாகக் காதலிக்கிறார். இதற்கிடையே, வேலைக்காகச் சென்னை சென்ற எம்.ஜி.ஆரை தேடி, அவருடைய குடும்பம் வந்துவிடுகிறது. கூடவே பிரச்சினையும்வருகிறது. தன் குடும்பத்தையும் தன் மீது ஆசைப்படும்காஞ்சனாவையும் அவர் தந்தையையும் எம்.ஜி.ஆர் எப்படிச் சமாளிக்கிறார், என்று கதை செல்லும்.

‘வியட்நாம் வீடு’ சுந்தரம் வசனம் எழுதினார். சங்கர்-கணேஷ் இசையமைத்தனர். கணேஷின் மாமனார்தான் தயாரிப்பாளர் வேலுமணி. மாமனார்தயாரிக்கும் படங்களுக்கு இவர்கள் இசை அமைப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். மாமனார்படத்துக்கு மருமகன் இசை அமைப்பதைத்தவறாகச் சொல்லிவிடுவார்களோ என்பதற்காகத்தான் இப்படித் தவிர்த்து வந்தனர். இதைக்கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், வேலுமணியிடம்‘கலை வேறு, உறவு வேறு, அதற்கும் குடும்பத்துக்கும் தொடர்பில்லை. அவர்கள் நன்றாகவே இசை அமைக்கிறார்கள். அவர்களே இந்தப்படத்துக்கு இசை அமைக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.

அவர் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை இந்தப் படத்தின் பாடல்கள்.‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’, ‘நான் ஏன் பிறந்தேன்?’, ‘தம்பிக்கு ஒரு பாட்டு’, ’உனது விழியில் எனது பார்வை’, ‘சித்திரச் சோலைகளே’, ‘தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்’ என்னம்மா சின்னப் பொண்ணு ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவின. இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஸ்டைலான ‘காஸ்ட்யூம்கள்’ பேசப்பட்டன. 1972-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் 10 வாரங்கள் வரை ஓடி வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here