அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘டிசி’ மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை முடித்துவிட்டு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினி – கமல் மீண்டும் இணையும் படத்தை இயக்காததற்கான காரணத்தைச் சொன்னார்.
“கூலி ரிலீஸ் நேரத்துல ரஜினி சாரையும் கமல் சாரையும் சந்திச்சேன். அவங்க ரெண்டு பேரும் இணையும் படம் பற்றி பேசினாங்க. எனக்கு அது பெரிய வாய்ப்பு. 46 வருஷம் கழிச்சு அவங்க சேர்ந்து நடிக்கப் போற படத்தை இயக்கச் சொல்லி என்னைக் கேட்டதே பெரிய விஷயம். ஆனா, நான் ‘கைதி 2’ பண்றதா இருந்தது.
கதையை ரெடி பண்ணிட்டு, ரெண்டு பேரையும் பார்த்தேன். அவங்களுக்குக் கதை பிடிச்சிருந்தது. ஆனா, அவங்க தொடர்ந்து ஆக்ஷன் படங்கள்ல நடிச்சுட்டு வர்றதால, லைட்டான ஒரு படத்தை எதிர்பார்த்தாங்க. எனக்கு அப்படி படம் பண்ண வராதுங்கறதால, அதைச் சொல்லிவிட்டு வந்துட்டேன். இதுக்கு இடையில மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 6 வருஷத்துக்கு முன்னால எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தது. அந்த ‘கமிட்மென்டு’க்காக அல்லு அர்ஜுன் படத்தை இயக்குறேன்.
உங்களோட, ‘எல்சியூ’ முடிஞ்சிடுச்சு, இனி அப்படி படம் பண்ண மாட்டார்னு சொல்றாங்களே…
கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ்… இதெல்லாம் என்னோட அடுத்தடுத்த ஒப்பந்தங்கள். அதனால, எல்சியூ மூடப்படலை. அல்லு அர்ஜுன் படம் முடிஞ்சதும் அது தொடரும்.
ஆரம்பத்துல உங்களுக்கு ஆதரவா நிறைய விமர்சனம் வந்துச்சு… இப்ப எதிராகவும் வருது, எப்படி பார்க்கிறீங்க?
அதை தனிப்பட்ட விஷயமா எடுத்துக்க மாட்டேன். படம் இயக்குறது என் வேலை. என் முதல் படம், ‘மாநகரம்’ வெளியானதுல இருந்து கிட்டத்தட்ட 9 வருஷமா எவ்வளவு பாராட்டுகளை வாங்கியிருப்பேன்னு எனக்கு தெரியும். டக்குன்னு ஒரு விமர்சனம் எதிரா வரும்போது அதை ஏத்துக்க மாட்டேன்னு சொல்றது நியாயமில்லை. அதுல அக்கறை இருக்கறதாகத்தான் பார்க்கிறேன்.
உங்க படங்கள்ல அதிக வன்முறை இருக்கிறதா புகார்கள் வருதே…
நான் சின்ன வயசுல, தேவர்மகன், விருமாண்டி போன்ற ஆக் ஷன் படங்கள் பார்த்து அதுபோல இயக்குநராகணும்னுதான் வந்தேன். ஒரு இரண்டரை மணி நேரம், பார்வையாளர்களை தியேட்டர்ல உட்கார வைக்கறது பெரிய சவாலா இருக்கு. நாம ஜாக்கிசான், புரூஸ்லீ, அர்னால்டு படங்கள் பார்த்துதான் வந்தோம். நம்மூர்லயே, ரஜினி, கமல், விஜயகாந்தை பார்த்தோம். அப்படித்தான் ஆக் ஷன் படங்கள் பண்றேன். அது ஆக் ஷன்தான், வன்முறை இல்லை. எனக்கு சமூக பொறுப்பு இருக்கான்னு கேட்கிறீங்கன்னா, இருக்கு. பார்க்கிறவங்களுக்கும் அது இருக்கணும்னு நினைக்கிறேன்.
ரஜினி, கமலை எக்ஸ் தளத்துல ‘அன்ஃபாலோ’ பண்ணிட்டீங்களாமே…என்ன பிரச்சனை?
எப்படி பண்ண முடியும்? அவங்க ரெண்டு பேரும் எந்த உயரத்துல இருக்காங்க; அவங்களை நான் இயக்கியதே பாக்கியம்னு நினைச்சுட்டு இருக்கேன். அவங்களை அன்ஃபாலோ பண்ண முடியுமா? அது உண்மையில்லை. அந்த செய்தி எந்தளவு ரீச்சாயிடுச்சுன்னா, எங்கம்மாவுக்கு எக்ஸ் தளம், பாலோயர்ஸ் பற்றிலாம் தெரியாது. அவங்களே போன் பண்ணி கேட்கற அளவுக்கு அது போயிருச்சு.
போதை கலாச்சாரத்துக்கு உங்க படங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறதா விமர்சனங்கள் வருது…
என் படங்கள்ல போதைக்கு எதிராகத்தான் கருத்துகளைச் சொல்லியிருக்கேன். எனக்கு கிடைச்ச ஹீரோக்கள் மூலமா, போதைக்கு எதிரான கருத்தை உரக்கச் சொல்லிட்டுதான் இருக்கேன். அதுக்கு எதிரா குறும்படங்கள் எடுக்க வச்சு, அதுல யாரு முதல் பரிசு வாங்குறாரோ, அவரை என் அசிஸ்டென்டா சேர்த்துக்கிறேன்னு சொல்லி, சேர்த்திருக்கேன். என் பக்கம் இருந்து போதைக்கு எதிரா நானும் விழிப்புணர்வுகளை பண்ணிட்டிருக்கேன். பிறகு எப்படி போதை கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்னு சொல்ல முடியும்?



