முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

0
141

ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது 93 வயதான அந்த நபர் தனது மனைவிக்கு தாலி வாங்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். தங்கள் மகன் குடிகாரனாகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் தாலி செயின், தொங்கட்டான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர்களிடம் பணம் இல்லையென்று நினைத்து நான் தங்கத் தாலியைத் தருவதாகக் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்து தங்களிடமிருந்து சில்லறையைத் தந்தனர். அந்த சில்லறை ரூ.1,100-க்கு இருந்தது.

இதையடுத்து நான் அவரிடமிருந்து வெறும் ரூ.10-ம், அவரது மனைவியிடமிருந்து ரூ.10-ம் ஆக ரூ.20 பெற்றுக் கொண்டு தாலியை அவர்களுக்குக் கொடுத்தேன். பணம் கொடுக்காமல் நகையை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து ஆசிர்வாதமாக ரூ.20 வாங்கி, அந்தத் தம்பதியினரிடம் தாலியை (மங்கள சூத்திரா) கொடுத்தேன். அவர்களின் செய்கை என்னை மிகவும் கவர்ந்தது. அதனால்தான் அவர்களுக்கு தங்கத் தாலியை ரூ.20-க்குத் தந்தேன்.

அவர்கள் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாங்கீர் என்ற கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நிவ்ருட்டி ஷிண்டே, சாந்தாபாய் என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் ஆடி மாத ஏகாதசிக்காக பண்டார்பூரிலுள்ள கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். தள்ளாத வயதிலும் தனது மனைவிக்காக தாலியை வாங்கிக் கொடுத்த அவரது பாசம் என்னை புல்லரிக்கை வைத்தது. அந்தத் தாலியில் அவர்கள் கொண்டு வந்த செயின், தொங்கட்டானையும் சேர்த்துக் கொண்டனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here