விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஆர்யன்’. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்கியுள்ள இப்படத்தை பிரவீன் கே இயக்கியுள்ளார். அக். 31-ல் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து, நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
படக்குழுவினர் கலந்துகொண்ட விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷ்ணு விஷால் கூறும்போது, “ஆர்யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். தாமதம் காரணமாகப் படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க முடிந்தது. இயக்குநர் பிரவீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையில் நான் தலையிட்டேனா? எனக் கேட்கிறார்கள். சினிமா கூட்டு முயற்சிதான். தலையிடுவது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஹீரோவாக பொறுப்பு எடுத்துக் கொள்வது என நினைக்கிறேன்.
தியேட்டருக்கு பார்வையாளர்கள் வரும் போது இயக்குநருக்காக மட்டும் வரவில்லை. நடிகருக்காகவும் வருகிறார்கள். எனவே அது என்னுடைய பொறுப்பு தான். இப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி நிறைய விவாதம் எங்களுக்குள்ளேயே நடந்தது. ஒரு விஷயத்தை நியாயப்படுத்தலாம் என்றும் வேண்டாம் என்றும் இரு தேர்வுகள் இருந்தன. பார்வையாளர்களுக்கு இப்படி இருந்தால் பிடிக்கும் என நினைத்து ஒன்றை வைத்தோம்.
ஆனால் அதுதான் இப்போது நெகட்டிவ் விஷயங்களைப் பெறுகிறது. அதையும் கவனித்து படத்திலிருந்து நீக்கி, அதனை மாற்றி இருக்கிறோம். புதிய கிளைமாக்ஸுடன் படம் தற்போது வெற்றிகரமாக ஓடுகிறது.
என் சமீபத்திய படங்கள் திரையரங்கிலும் ஓடிடி-யிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளன; ஆர்யனும் அதே போல பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்து ‘கட்டா குஸ்தி 2’, என் சகோதரருடன் ஒரு படம், அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம் என வர இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் படங்களைத் தொடர்ந்து உருவாக்குவேன்” என்றார்.














