ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடந்த முறையை (2023 ஹாங்சோ விளையாட்டுப் போட்டி) விட குறைந்த அளவிலான பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். பதக்க எண்ணிக்கை குறைந்தது ஏன் என்பது தொடர்பாக விளையாட்டு விமர்சகர்கள் கேள்விக் கணைகளை எழுப்பியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், இம்முறை 85 பதக்கங்களை (21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம்) மட்டுமே வென்றுள்ளது. இது கடந்த முறை வென்ற 106 பதக்கங்களை விட 21 பதக்கங்கள் குறைவாகும். குறிப்பாக 7 தங்கப் பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் குறைவாக வென்றுள்ளனர்.
இம்முறை துப்பாக்கிச் சுடுதல் மற்றும் தடகளப் போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு பதக்கங்கள் வரவில்லை என்பதே உண்மை. துப்பாக்கிச் சுடுதலில் கடந்த 2023-ல் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை(22 பதக்கம்) வென்று அசத்திய நிலையில், இம்முறை 15 பதக்கங்களை (3 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம்) மட்டுமே கைப்பற்றியது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் ஏதுமின்றி வெளியேறிய நிலையில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றினார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவில் சுருச்சி சிங், கமல்ஜீத் ஆகியோர் அடங்கிய ஜோடி மட்டுமே தங்கம் வென்றது.
தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயத்தால் விலகினார். ஜிந்தர்பால் சிங்கும் தங்கத்தை வெல்லத் தவறினார். அதேவேளையில் நீளம் தாண்டுதல் வீரர் முரளி சங்கர், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே ஆகியோர் வெள்ளிப் பதக்கத்துடன் மட்டுமே திரும்பினர்.
3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் நம்பிக்கை அளிக்கும் வீரராகத் திகழ்ந்த அவினாஷ் சேபிள் 4-வது இடத்தை மட்டுமே பிடித்தார். கிரண் பஹால், எம். பூவம்மா, பிராச்சி சவுத்ரி, வித்யா ராம்ராஜ் ஆகியோரைக் கொண்ட மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட அணி, தடகளப் பிரிவின் ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. ஹாங்சோ போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை தடகளத்தில் வென்றிருந்த நிலையில் இம்முறை ஒரே ஒரு தங்கத்துடன் திருப்தி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
விளையாட்டு அரங்குகளுக்கான நீண்ட பயணங்கள், தாமதமான பேருந்துகள், குறைக்கப்பட்ட ஓய்வு நேரம் ஆகியவை விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூடுதல் பதக்கங்களை வெல்ல முடியாமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக பாட்மிண்டனில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே இம்முறை கிடைத்தது. முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து உள்ளிட்ட இந்தியர்கள் பதக்கங்களை வெல்லவில்லை. தடகளம், துப்பாக்கிச் சுடுதல், பாட்மிண்டன் போன்ற முக்கிய விளையாட்டுகளில் பதக்கங்களைக் கோட்டை விட்டதால் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில் வில்வித்தையில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பியது அனைவருக்கும் ஆறுதல் அளித்தது. முக்கியமாக, ரீகர்வ் பிரிவில் இந்திய வீரர்கள் 5 போட்டிகளிலும் பதக்கங்களை வென்றனர். இதில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால், ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் குறைந்தாலும், இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது தரத்தை உயர்த்தி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. கத்தார் நாட்டின் தோஹாவில் 2030-ல் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை குவிப்பார்கள் என நம்பலாம்.
அதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இப்போதிருந்தே பணிகளைத் தொடங்கவேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.
