ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றுமுன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
188 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவர்பிளேவில் இஷான் கிஷன் (0), திலக் வர்மா (1), அபிஷேக் சர்மா (15) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்ததால் இந்திய அணியால் மீளமுடியாமல் போனது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: பந்துவீச்சில் தொடக்க ஓவர்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். 20 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்களை வீழ்த்தினோம். அதன் பிறகு 7 முதல் 15 ஓவர்கள் வரை தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆனால் அதன் பின்னர் நாங்கள் இறுதிப் பகுதியில் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தோம். எனினும் ஒட்டுமொத்தமாக, நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். ஆனால், பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
180 முதல் 185 ரன்கள் இலக்கை துரத்தும் போது ஆட்டத்தை பவர்பிளேவில் வெல்ல முடியாது. ஆனால் பவர் பிளேவில் ஆட்டத்தை இழக்க நேரிடும். பவர் பிளேவில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். 180 முதல் 185 ரன்கள் இலக்கை துரத்தும் போது நாங்கள் விரும்பியபடி சிறிய அளவிலான பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதியாகும். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம்.
ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து வலுவாக மீண்டு வருவோம். ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் வேகக்கூட்டணி மிகவும் ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் ஏற்கெனவே இணைந்து விளையாடியுள்ளனர்.
அவர்கள் கூட்டாக 8 ஓவர்களை வீசி 43 ரன்களை மட்டுமே வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பந்து வீசினார்கள். அதைத்தான் நாங்கள் அவர்களிடமிருந்து விரும்புகிறோம். இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்கள் அணியில் இருப்பது சிறப்பான விஷயம்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடுத்து நடைபெற உள்ள ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. விஷயங்களை எளிமையாக வைத்திருக்க முயற்சிப்போம், நாங்கள் விளையாட விரும்பும் அதே பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடுவோம், எதுவும் மாறாது. நாங்கள் வலுவாக மீண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.














