ராசிபுரம் யாருக்கு ‘ராசி’புரம்? – இரண்டு கூட்டணிகளிலும் இப்போதே இழுபறி

0
17

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற அதிமுக வேட்பாளர் வி.சரோஜா சமூகநலத்துறைக்கு அமைச்சரானார்.

அடுத்ததாக, 2021-ல் இங்கு வெற்றிபெற்ற திமுக-வின் மா.மதிவேந்தன், இப்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ராசிபுரத்துக்கு இப்படியொரு ‘ராசி’ இருப்பதால் இம்முறை இங்கு போட்டியிட இரண்டு முக்கிய கூட்டணியிலும் போட்டி கடுமையாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில், கடந்த முறை அவினாசியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் சபாநாயகர் தனபால் இம்முறை தனது பழைய தொகுதியான ராசிபுரத்துக்கு மாறிவிடும் யோசனையில் இருக்கிறார். தனபாலுக்குப் போட்டியாக, கடந்த முறை சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராசிபுரத்தைத் தவறவிட்ட முன்னாள் அமைச்சர் சரோஜாவும் இம்முறை, விட்ட இடத்தைப் பிடிக்கும் முடிவில் இருக்கிறார்.

திமுக தரப்பில் அமைச்சர் மதிவேந்தனே மீண்டும் ராசிபுரத்தில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக-விலும் ராசிபுரத்து ராசியைக் கேள்விப்பட்டு அவர்களும் முட்டிப் பார்க்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரான பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக வேட்பாளராக இங்கு போட்டியிட்டு தோற்றவர் என்பதால், இம்முறை அவர் பாஜக வேட்பாளராக களமிறங்க பல கணக்குகளைப் போட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

தனக்கு இல்லாவிட்டாலும் தனது மகன் பிரேம்குமாருக்கு ராசிபுரத்தை ’ராசி’யாக்க வேண்டும் என்ற திட்டமும் துரைசாமிக்குள் இருக்கிறதாம்.

இரண்டு முக்கிய கூட்டணிகளிலும் ராசிபுரத்துக்காக இத்தனை ரகசியத் திட்டங்கள் ஓடிக்கொண்டிருக்க, ராசிபுரத்து மக்கள் யாருக்கு தொகுதியை ராசியாக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here