அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்டியிடும் தொகுதி என்பதால் எடப்பாடி இம்முறையும் தேர்தல் களத்தில் நட்சத்திர அந்தஸ்துக்கு தயாராகி வருகிறது. எடப்பாடி தொகுதிக்கும் பழனிசாமிக்குமான பந்தம் 1989-ல் இருந்தே தொடர்கிறது. இடையில் மூன்று தேர்தல்களைத் தவிர இப்போது வரைக்கும் எடப்பாடி அவர் கைக்குள் தான் இருக்கிறது. இந்த நிலையில், இம்முறை ‘வெல்வோம் 200’ என்று சொல்லிக் கிளம்பி இருக்கும் திமுக எடப்பாடியில் பழனிசாமியை எதிர்த்து யாரை நிறுத்தப் போகிறது என்பதே இரண்டு கட்சிகளிலும் இப்போது முக்கியக் கேள்வியாகச் சுற்றுகிறது.
“திமுகவுடன் ஒப்பிடுகையில் எடப்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் தான். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இம்முறையும் தெம்பாகவே இருக்கிறார் பழனிசாமி” என்று சொல்லும் சேலம் அதிமுகவினர், “1989-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது தொடங்கி தற்போது வரைக்கும் எடப்பாடி தொகுதியில் மட்டுமே பழனிசாமி போட்டியிட்டு வருகிறார். இங்கு அவர் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். 2011 முதல் தொடர்ச்சியாக 3 முறை அவர் வெற்றிபெற்றுள்ளார். அதற்கு முக்கியக் காரணம், இந்தத் தொகுதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள்.
மேட்டூர் அணையும் காவிரி ஆறும் எடப்பாடி தொகுதியை ஒட்டியே இருந்த போதும் அதன் பலன்கள் எடப்பாடி தொகுதிக்கு முழுமையாகக் கிடைக்காமல் இருந்தது. பழனிசாமி முதல்வரானதும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி, எடப்பாடி மட்டுமல்லாது, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் காவிரி நீர் கிடைக்கச் செய்தார். தொகுதியில் புதிதாக கல்லூரிகளைக் கொண்டு வந்தார். பழனிசாமி கடந்த 1996, 2006 தேர்தல்களில் தோற்றாலும் அவர் எடப்பாடி தொகுதியை விட்டுச் செல்லவில்லை. இதனால், தொகுதியில் அதிமுகவினர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளுக்குள்ளும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதனால், திமுக யாரை நிறுத்தினாலும் அவரை வெல்வது அத்தனை சுலபமில்லை” என்றனர்.
திமுகவினரோ, “எடப்பாடி தொகுதியில் வெற்றி தோல்வி என்பது கூட்டணிகள் அமைவதைப் பொறுத்தே இருக்கிறது. சாதிய பின்னணியும் வெற்றிக்கான பிரதான காரணியாக இருக்கிறது. கொங்கு வேளாள கவுண்டர்களும் வன்னியர்களும் மெஜாரிட்டியாக இருக்கும் தொகுதி எடப்பாடி. அதனால் தான் 1996-ல் பாமக இங்கு தனித்து நின்று வெற்றிபெற்றுள்ளது.
மற்ற தேர்தல்களில் எல்லாம் கூட்டணி தான் வெற்றியைத் தீர்மானித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாமக உடன் யார் கூட்டணியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. திமுக இந்தத் தொகுதியில் 6 முறை நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. ஆனால், கூட்டணி சரியாக அமையாததால் ஒருமுறைகூட வெல்ல முடியவில்லை. 2021-ல் பழனிசாமிக்கு எதிராக, சம்பத்குமார் என்ற புதுமுகத்தை திமுக நிறுத்தியது. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால் பழனிசாமி எளிதில் வெற்றிபெற்றார்.
இம்முறை பழனிசாமியை எதிர்த்து நிறுத்தப்போகும் வேட்பாளரை திமுக தலைமை இன்னும் இறுதி செய்ததாக தெரியவில்லை. பழனிசாமியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதியை நிறுத்தலாம் என்ற பேச்சு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், அவரும் இப்போது எம்.பி. ஆகிவிட்டார். அடுத்த சாய்ஸாக, சேலம் முன்னாள் எம்.பி-யான எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரும் அடிபட்டது. ஆனால் அவர், மேட்டூர் அல்லது சேலம் மேற்கு தொகுதியையே விரும்புவதாகத் தெரிகிறது. இவரும் இல்லை என்றால் கடந்த முறையைப் போலவே இம்முறையும் புதுமுகம் ஒருவரையே எடப்பாடியில் நிறுத்தும் திமுக. அல்லது கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தாலும் வியப்பில்லை” என்றனர்.