“முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்?” – தினகரனை திருப்பிக் கேட்கும் ஆர்.பி.உதயகுமார்

0
12

‘‘முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்? அந்தப் பாவமெல்லாம் உங்களைச் சும்மா விடாது” என்று டிடிவி. தினகரனுக்கு எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: இன்றைக்கு, ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன சொல்கிறார் என்று நாட்டு மக்களுக்கும் புரியவில்லை; அவருக்கும் புரியவில்லை.

தான் தொடங்கிய அமமுக கட்சியை பற்றி பேசாமல், விஜய்யையும், திமுக-வையும் தூக்கிப்பிடித்து பேசி வருகிறார். ஜெயலலிதாவால் 10 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கிவைக்கப் பட்டிருந்தவர் தினகரன். “என் முகத்திலேயே விழிக்கக் கூடாது” என்று ஜெயலலிதா சொன்னதால் தமிழகத்துக்குள் வராமல் புதுச்சேரியில் தோட்டத்து பங்களாவில் பதுங்கி இருந்தார்.

தற்போது அதிமுக மீதும், பொதுச்செயலாளர் பழனிசாமி மீதும் தினமும் அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார் தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு கோடி அதிமுக தொண்டர்களும் அகதிகள் போலவும், ஆதரவற்றவர்களாகவும் நின்றபோது அவர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தவர் பழனிசாமி. அதிமுக தற்போது 75 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு எம்எல்ஏ கூட இல்லாத டிடிவி.தினகரன் அதிமுக-வை பழித்துப் பேசி வருகிறார்.

“மனோஜ் பாண்டியன் சட்ட ஞானம் கொண்டவர். அவர் திமுக-வுக்குச் சென்றதற்கும் பழனிசாமிதான் காரணம்” என வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி, பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, தங்கதமிழ்ச்செல்வன் கே.கே.உமாதேவன், உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வந்தார்கள்? செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்?

உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி சிந்திக்க உங்களுக்கு நேரம் இருந்ததா? ஜெயலலிதா மறைந்த பின்பு ஆட்சியையும், கட்சியையும் ஆட்டையப் போட திட்டம் போட்டீர்கள். பழனிசாமியிடம் உங்கள் பருப்பு வேகவில்லை. அந்த விரக்தியில், வாய்க்கு வந்ததை எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

“பழனிசாமி மீது ஏன் கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேட்கிறீர்கள். இது குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவாதமே நடைபெற்று உள்ளது. நீங்கள் சட்டமன்றம் செல்லவில்லையென்றால், பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். “போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு உளவுத் துறையினர் அனுப்பிய ரகசிய கடிதங்கள் இருந்தது… அதை நான் கிழித்து விட்டேன்” என்று கூறுகிறார் தினகரன்.

இப்படி, பொதுவெளியில் எதை வேண்டுமானாலும் வாய்க்கு வந்ததை அவதூறாகப் பேசலாமா? இவருக்கு என்ன தான் பிரச்சினை என்று தெரியவில்லை. அமமுக-வை ஆரம்பித்த போது எவ்வளவு பேர் உங்களுக்கு தோள் கொடுத்து நின்றார்கள்… அவர்களில் எவ்வளவு பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினீர்கள்? தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?

மக்கள் பிரச்சினைகள் சார்ந்து தினகரன் எதுவுமே செய்தது இல்லை. அதிமுக-வை பற்றி பேசி கொண்டிருப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். உங்களோட கொசுக்கடி தாங்க முடியவில்லை. ‘நானும் ரவுடி’ தான் என்பது போல தினகரன் பரிதாபகரமான நிலைக்குச் சென்றுவிட்டார்.

முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா சிறை செல்ல யார் காரணம்? அது ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்தப் பாவமெல்லாம் உங்களைச் சும்மா விடாது. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்தீர்களா என்பது உள்ளிட்ட ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அதிமுக மூன்றாமிடத்துக்குப் போய் விடும் என்று நீங்கள் சொல்வது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. உங்கள் பேச்சு, நடவடிக்கை எல்லாம் 23-ம் புலிகேசியைப் போல் உள்ளது. நீங்கள் இனியும் தரம் தாழ்ந்து பேசினால் நாங்களும் பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here