உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதான குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் என்ன என்பதை ஆராய, ஆந்திர அரசு ‘எஸ்ஐடி’ என்னும் சிறப்பு விசாரணைக் குழுவை குண்டூர் ஐஜி சர்வேஷ்ட்ர திரிபாதி தலைமையில் அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், விசாகப்பட் டினம் டிஐஜி கோபிநாத் ஜெட்டி, கடப்பா எஸ்பி. ஹர்ஷவர்தன் ராஜுஉட்பட மொத்தம் 9 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் 3-வது நாளாகநேற்றும் விசாரணை நடத்தினர்.அப்போது திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவை சந்தித்து, ஏ ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். அன்றைய டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் எவை? அவர்கள் குறிப்பிட்ட தொகை எவ்வளவு? அதிக தொகை முதல் குறைந்த தொகை வரை பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் யார் யார் ? இதில் டெண்டர் எவ்வாறு நடத்தப்பட்டது? டெண்டர் பெற்ற நிறுவனத்தின் போக்குவரத்து எப்படி நிகழ்ந்தது? டேங்கரில் இருந்து நெய்யின் மாதிரி எடுக்கப்பட்டதா? அல்லதுமாதிரியை அந்த நிறுவனம் தனியாக கேனில் வழங்கியதா? அந்த மாதிரியை பரிசோதித்தவர்கள் யார் யார்? அதன் அதிகாரப்பூர்வ அறிக்கை என்ன சொல்கிறது? போன்றவை குறித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் சிறப்பு விசாரணைக்குழு வினர் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர்.இது தொடர்பாக அதிகாரி முரளி கிருஷ்ணாவையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. எல்-1 மற்றும் எல்-2 ஆகிய இரு நிறுவனமும் டெண்டரில் ஒரே தொகையை குறிப்பிட்டிருந்தால், 65:35 எனும் சதவீதத்தில் டெண்டர் ஒப்புதல் வழங்கப்பட்டதா? இல்லையா? அப்படி இருந்தால் ஒரு கிலோ நெய் ரூ.319.80-க்கு வேறு ஏதாவது நெய் தயாரிக்கும் நிறுவனம் டெண்டரில் பங்கேற்றதா? என்றும் விசாரிக்கப்பட்டது.
இவ்வளவு குறைந்த விலைக்கு நெய்யை வாங்கும் முன் தேவஸ்தான அதிகாரிகள், அப்போது தரமான நெய் மார்க்கெட்டில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை அறிந்துதான் டெண்டரை நடத்தினார்களா? என்றும் கேள்விஎழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, தரமற்ற நெய்யை விநியோகம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு நெய் விநியோகம் வழங்க யார் சிபாரிசு செய்தது? இதில் அறங்காவலர் குழுவில் இடம் பிடித்தவர் யார் ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு சிறப்பு விசாரணைக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.














