பார்ட்டி பிள்ளைகளை பக்குவமாய் வழிநடத்திச் செல்ல அண்மையில் பனையூர் பார்ட்டியில் சார்பு அணி நிர்வாகிகளை அறிவித்தார்கள். ஆனால், மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அறிவித்தவர்கள், சார்பு அணிகளின் மாநில தலைமைக்கு இன்னும் யாரையும் நியமிக்காமல் இருக்கிறார்களாம். இதனால், யார் காட்டிய வழியில் போவது என்று தெரியாமல் அணிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்களாம். ஏற்கெனவே, கட்சிப் பதவிகளை தருவதாகச் சொல்லி கட்சியின் ‘பிஸி’ தளபதி பலபேரிடம் பலவிதமாக பலன் ‘பெற்று’ வைத்திருக்கிறாராம்.
தற்போது சார்பு அணிகளுக்கான மாநில நிர்வாகிகள் பட்டியலில் அவர்களில் சிலரை எப்படியாவது திணித்துவிட்டு, ‘பெற்ற’ கடனை தீர்த்துவிடலாம் என நினைக்கிறாராம். ஆனால், லேட்டாக கட்சிக்குள் வந்த ‘ஹெல்த்’ புள்ளி, ’பிஸி’ தளபதியின் பிளானை செயல்படுத்த விடாமல் குறுக்கே நிற்கிறாராம்.
கட்சி தலைவர் எத்தனை மணிக்கு மேடைக்கு வரவேண்டும், எத்தனை நிமிடம் பேச வேண்டும், எதையெல்லாம் பேசவேண்டும் என அனைத்தையும் தனது கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் ‘ஹெல்த்’ புள்ளி, ‘பிஸி’ தளபதியின், ‘பலனைக் கொடு… பதவியைப் பிடி’ டீல்களை அரசல் புரசலாக தெரிந்து வைத்துக்கொண்டு திரும்பிய பக்கமெல்லாம் திண்டுக்கல் பூட்டைப் போடுகிறாராம்.














