“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி

0
21

பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து வரும் கவுதமி, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டி இது.

நடிகர், நடிகைகளுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று நம்புகிறீர்களா?

மக்கள் மத்தியில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே அவர்கள் பிரபலங்கள். இது நடிகர், நடிகையருக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட பிரபலமானவர்கள், பொது இடங்களுக்குச் செல்லும்பொழுது, கூட்டம் கூடத்தான் செய்யும். அத்தகைய பிரபலங்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். அவர்களின் செயல்பாட்டை புரிந்து கொண்டால், மக்கள் அவர்களை நேசிக்கத் தொடங்கி விடுவர். ஒரு பிரபலத்திற்கு கூடும் கூட்டம், வாக்குகளாக மாற இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

சிவாஜி, சிரஞ்சீவியில் தொடங்கி, கமல் வரை உச்ச நடிகர்கள் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியவில்லையே..?

உச்ச நடிகராக இருந்தாலும், இவர் எங்களில் ஒருவர், எங்களை தலைமையேற்று நடத்துவார், எங்களது வலியை உணர்ந்து தீர்வு கொடுப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம்வர வேண்டும். அந்த நம்பிக்கை வராவிட்டால்,அரசியலில் யாருமே வெற்றி பெற முடியாது.

திமுகவின் கட்டுப்பாட்டில் தான் தமிழ் திரை உலகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து..?

இது குற்றச்சாட்டு அல்ல. ஃபேக்ட். தமிழ்நாட்டில் இன்று யாராவது ஒருவர், தனது ஆசை, கனவுகளை எல்லாம் முதலீடு செய்து ஒரு படம் தயாரித்தால், அது வெளியாகும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனென்றால்,இங்கு திரைப்பட விநியோகம், திரையிடல் உரிமை முழுக்க திமுக குடும்பத்தினரின் கையில் மட்டுமே உள்ளது. நீங்கள் எவ்வளவு ரூபாய் செலவு செய்து படம் எடுத்தாலும், அவர்கள் சொல்கிற தொகைக்குத்தான் கொடுக்க வேண்டியுள்ளது. அதோடு, நடிகர்களை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் முடக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

திமுக ஆட்சியை வீழ்த்துவது தான் எனது குறிக்கோள் என்று பேசி வருகிறீர்கள். வீழ்த்த வேண்டிய அளவுக்கு உங்களை பாதித்த விஷயங்கள் என்ன?   

ஊழல், விலைவாசி உயர்வு, போதைக் கலாச்சாரம், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மின் கட்டணம் ஒன்றே போதுமே. எந்த ஊரிலாவது தொடர்ச்சியாக ஒரு கி.மீ. தூரத்துக்கு ஒரு சாலை சேதம் இல்லாமல் இருக்கிறதா? இதெல்லாம் ஒரு அரசாங்கமா… இவர்கள் மக்களைப் பாதுகாக்கிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், மாணவியருக்கு கல்வி உதவித்தொகை பெண்களின் வாக்குகளை திமுகவுக்கு பெற்றுத் தராதா?

எல்லா மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்து, பெண்களை ஏமாற்றி வெற்றி பெற்றனர். அண்ணன் இபிஎஸ் தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் உரிமைத்தொகை என்று சிலருக்கு வழங்கினர். இல
வசப் பேருந்து பயணம் செய்த பெண்களை, ஒரு முன்னாள் அமைச்சர் எப்படி இழிவுபடுத்திப் பேசினார் என்பதை மறக்க முடியுமா? இதையெல்லாம் உணர்ந்த பெண்கள், நொந்து போனது மட்டுமல்லாது, நொறுங்கிப் போய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது.

இத்தனை பிரச்சினைகளை பட்டியலிடுகிறீர்கள். ஆனால், “200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என முதல்வர் ஸ்டாலின் உறுதியாகச் சொல்கிறாரே?

அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக நடந்தே தீரும். அப்போதுதான் மக்களைக் காப்பாற்ற முடியும். இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்த நிலையில் இந்த தேர்தலிலும் அது எதிரொலிக்காதா?

இது தவறான புள்ளி விவரம். இபிஎஸ் தலைமையில் அதிமுக வாக்கு வங்கி ஒருங்கிணைக்கக்கப்பட்டுள்ளது. என்ன பிரச்சினை வந்தாலும், என்ன எதிர்ப்பு வந்தாலும், யார் துரோகம் செய்தாலும், இபிஎஸ் உறுதியாக நிற்கிறார். கட்சியை பலப்படுத்தியதுடன் தமிழக மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பியும் வருகிறார்.

என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அமித் ஷா அறிவிக்கவில்லை என்ற சர்ச்சை குறித்து..?

தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று அமித் ஷா சொல்லிவிட்டார். இதற்கு என்ன அர்த்தம்?

அதிமுக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவி தருவதாக விஜய்யை ஆர்.பி.உதயகுமார் அழைக்கிறாரே?

அது அவருடைய கருத்து. இந்த விஷயத்தில் இபிஎஸ் என்ன முடிவு எடுக்கிறாரோ, என்ன அறிவிக்கிறாரோ அதுதான் இறுதியானது. ஒரு கூட்டணி அமைய நிறைய காரணங்கள் இருக்கிறது. அப்படி அமைந்த கூட்டணி நிலைத்து நிற்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது.

இபிஎஸ் பிரச்சார கூட்டங்களுக்கு தவெக தொண்டர்களும் கொடியுடன் வருகிறார்களே..?

எந்தவித அழுத்தமும் இல்லாமல், அவர்களாக விருப்பப்பட்டு, வருகிறார்கள். இது நல்ல விஷயம்; வரவேற்கத்தக்கது.

குஷ்பு போன்றவர்கள் அரசியலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்கிறார்கள். உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா?

குஷ்புவின் அனுபவம் குறித்து நான் பேச முடியாது. தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு என முடிவு செய்து அதிமுகவில் சேர்ந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை, கட்சியில் உரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கிறது.

ராஜபாளையம் தொகுதி உங்களுக்காக காத்திருக்கிறதாமே..?

மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலுக்கு வரும்போது, அந்த மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அண்ணன் இபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here