ரம்ஜான் நோன்புக்கான மசூதிகள் அறிவிப்பில் உ.பி அரசின் நிலைப்பாடு என்ன?

0
16

ரம்ஜான் மாத நோன்பு நேரத்துக்காக மசூதிகளின் அன்றாட அறிவிப்பின் மீது தனது நிலைப்பாட்டை உத்தரப் பிரதேச அரசு தெளிவுபடுத்தியது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான கமல் அக்தர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து உ.பி சட்டப்பேரவையின் பூஜ்ஜிய நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான கமல் அக்தர் எழுப்பிய கேள்வியில், “ஹோலி, தீபாவளி, தசரா, கன்வார் யாத்திரை மற்றும் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய கொண்டாட்டங்கள் உட்பட அனைத்து மதங்களின் பண்டிகைகளும் நம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த வகையில், ரம்ஜானின் நோன்பு குறித்த நேரங்களை அறிவிக்க மசூதிகளில் இருந்து பாரம்பரியமாக அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. தற்போது, பெரும்பாலான மதத் தலங்களிலிருந்து ஒலிபெருக்கிகளை உ.பி அரசு அகற்றி விட்டது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய புனித ரம்ஜான் மாதத்தில் அறிவிப்புகளை வெளியிட மசூதிகள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா?” எனக் கேட்டிருந்தார்.

இதற்கு உ.பி மாநில நிதி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா அளித்த பதிலில், “கடிகாரங்கள் பொதுவாக இல்லாதபோதும், சூரியனின் நிலையைக் கொண்டு மக்கள் நேரத்தை மதிப்பிடும்போதும் மசூதியின் அறிவிப்பு நடைமுறை தோன்றியது.

ஆனால், இன்று ரிக்‌ஷா ஓட்டுபவர், தெரு விற்பனையாளர் அல்லது காய்கறி விற்பனையாளர் உள்ளிட்ட ஒவ்வொருவரிடமும் நேரத்தைக் காட்டும் மொபைல் போன் உள்ளது. எனவே அந்தத் தேவை இனி இல்லை. ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஒலியின் அளவு மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, ஒலிபெருக்கிகள் தடை என்பது எங்கள் உத்தரவு அல்ல. உச்ச நீதிமன்றம் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்த விதிகளை வகுத்துள்ளதே தவிர, அரசு யாருடைய மத நம்பிக்கைகளிலும் தலையிடவில்லை. இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

திருமணங்களில் கூட, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பால் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்து புகார்கள் வந்தால் காவல் துறை அதை ஒழுங்குபடுத்துகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here