மணிக்கு 154 கி.மீ வேகம் வரை வீசக்கூடிய ஐபிஎல் கண்டுப்பிடிப்பான மயங்க் யாதவ், 2025 ஐபிஎல் சீசனிலிருந்து அப்படியே இந்திய அணி வரை நீண்ட தூரம் இடைவெளி இல்லாமல் செல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஆலோசகர் ஜாகீர் கான் இருவரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவின் ஃபிட்னெஸ் அணியின் ஆட்டத்தைத் தீர்மானிக்கும் என்று நம்புகின்றனர்.
ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரை நீண்ட காலம் ஆடுமாறு காப்பது அவசியம் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஃப்ரான்சைஸியிடமும் பயனுள்ள வகையில் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐபிஎல் 2024 தொடரில் 3 போட்டிகளில் 2 ஆட்ட நாயகன் விருதுகளை மயங்க் யாதவ் தட்டிச் சென்றார். அதுவும் அவர் வீசிய 12 ஓவர்களில் 30 பந்துகள் வரை மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகம் வீசினார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையாகும்.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அறிமுக போட்டியிலேயே மீண்டும் 2 ஓவர்கள் சீராக மணிக்கு 145 கி.மீ வேகம் தொட்டார். ஆனால் அதன் பிறகு காயமடைந்தார். இவர் ஐபிஎல் 2025 தொடருக்காக எல்எஸ்ஜி அணியினால் ரூ.11 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.
“மயங்க் யாதவ் போன்ற ஒரு பவுலர் சீராக நீண்ட காலம் வீச வேண்டும் என்பதுதான் என் நோக்கம் இதை நோக்கியே அவர் மீது நான் என் கவனத்தின் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன், அதாவது இப்படி காயங்களினால் இடைவெளி விழாமல் நீண்ட காலம் ஆட வேண்டும் என்பதற்காகத்தான் அவருடன் பணியாற்றி வருகிறேன்.
எனவே ஐபிஎல் 2025 தொடருக்கு அவர் 150% ஃபிட்னஸ் ஆக வேண்டும் வெறும் 100% மட்டும் போதாது என்று கருதி பணியாற்றி வருகிறேன்.” என்றார் ஜாகீர் கான்.














