கிரிக்கெட் பயிற்சியில் என்ன ரகசியம்? – இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த ஆஸி. ஊடகம்

0
231

பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியினர் பழைய பெர்த் ஸ்டேடியமான ‘வாக்கா’வில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி அமர்வுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்பான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்கா மைதானம் மறுகட்டுமான ஒப்பந்தத்தை எடுத்துள்ள கட்டுமான நிறுவனம் கட்டுமானப் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் போது புகைப்படமோ வீடியோவோ, எடுக்கக் கூடாது, பயிற்சியை பார்க்கவே கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்டஸ் ஸ்டேடிய பிட்ச் பயங்கரமாக பந்துகள் எகிறும் பிட்ச் ஆகவே அதற்காகத் தயார்படுத்திக் கொள்ள பழைய வாக்கா மையப் பிட்ச் போன்றே வலையில் வடிவமைக்கப்பட்டு அதில் பயிற்சி செய்து வருகின்றனர்.

ஏதோ கர்ப்பக் கிரகம் போல் தங்களைச் சுற்றி இப்படி ஒரு புனிதத்தைக் கட்டமைத்துக் கொள்வது ஏன் என்று ஆஸ்திரேலிய ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு முன்பு கூட இப்படி ரகசியமாக பயிற்சிகளில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த அளவுக்கு தீவிரமாக அப்போது இருந்ததில்லை என்கிறது ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஊடகம்.

ஆனால், முழுக்கவும் இந்திய அணி பயிற்சியை மறைத்துக் கொள்ள முடியவில்லை. கெட்டி இமேஜஸ் புகைப்படக் கலைஞர் பால் கேன் என்பவருக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மற்ற செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து சிலர் வலைப்பயிற்சியை பார்க்கவே செய்துள்ளனர்.

அதாவது வழக்கமான உடற்பயிற்சி, த்ரோ டவுன்கள், பவுலிங், பீல்டிங் பயிற்சிகளுக்கு ஏன் இந்த ரகசியக் காப்பு என்பதே ஆஸ்திரேலிய ஊடகம் எழுப்பும் கேள்வியாகும். மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஊழியர்கள் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவும் இருந்ததாம்.

அணிக்குள்ளேயே பிரித்து விளையாடும் போட்டி நாளை முதல் ஞாயிறு வரை நடைபெறவுள்ளது, ஆனால், இதற்கும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஏதோ ஒரு ஆக்‌ஷன் சினிமாவில் வரும் ரகசிய நடவடிக்கை போன்று ஏன் இப்படி என்று ஆஸ்திரேலிய ஊடகம் கேலி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here