Home தேசிய செய்திகள் ‘மேடே’ அழைப்பு என்றால் என்ன? – அகமதாபாத் விபத்தும், விமானிகள் அறையும்

‘மேடே’ அழைப்பு என்றால் என்ன? – அகமதாபாத் விபத்தும், விமானிகள் அறையும்

0

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் உயரே பறக்க முடியாமல் திணறி கீழே தரையிறங்கி மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது. அதற்கு முன் அந்த விமானத்தின் பைலட் கேப்டன் சுமீத் சபர்வால், விமான கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே’ அழைப்பு விடுத்துள்ளார்.

இது விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்போது பைலட் அல்லது கப்பல் கேப்டன் விடுக்கும் அவசரகால அழைப்பு. இது சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை. பிரெஞ்சு வார்த்தை ‘மெய்டர்’ என்றால் உதவுங்கள் என்று அரத்தம். அதில் இருந்து உருவானதுதான் ‘மேடே’. இது கடந்த 1920-ம் ஆண்டு உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்ஜின் பழுது, பயணத்தின் போது தீ விபத்து, கட்டுப்பாட்டை இழத்தல், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நேரங்களில் பைலட் விமான கட்டப்பாட்டு அறைக்கு இந்த தகவலை தெரிவிப்பார். சில சமயங்களில், ஆபத்தான சூழ்நிலையில் உள்ள விமானம் மற்றும் கப்பல் தகவல் தொடர்பை இழந்த சூழலில், அருகில் உள்ள விமானம் மற்றும் கப்பல் ‘மேடே’ அழைப்பை விடுக்கும்.

விமானிகள் அறையில் நடந்தது என்ன? – நிபுணர் கணிப்பு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேலே எழும்ப தேவையான உந்துதல் கிடைக்காமல் தடுமாறியது வீடியோ பகுப்பாய்வின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் விமானத்தை மேலே எழுப்ப தேவையான அவசர முயற்சிகளை விமானி மேற்கொண்டிருப்பார்.

ஆனால், அவரது கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து விமானம் கீழே இறங்கியுள்ளது. 174 நாட்ஸ். இதுதான் விமானம் அடையக்கூடிய அதிகபட்ச வேகம். அது இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், என்ஜின் போதுமான சக்தியை உருவாக்கவில்லை.

இதனால், புறம்படும்போது சரியாக இருந்த விமானத்தால் மேலே பறக்க முடியாமல் தடுமாறி கீழே இறங்கத் தொடங்கியுள்ளது. இது, என்ஜின் சக்தியை இழந்தால் மட்டுமே நிகழும். விசாரணையில் சரியான காரணம் வெளிப்படும் என்று முன்னாள் மூத்த விமானி கேப்டன் சவுரவ் பட்நாகர் தெரிவித்தார்.

625அடி: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது. அந்த விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்துக்குள்ளேயே விபத்தில் சிக்கியதாக விமானங்களின் இயக்கத்தை கண்காணிக்கும் பிளைட் ராடார் 24 நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானத்திலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு கடைசி சமிக்ஞை 1.38 மணிக்கு கிடைத்தாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 625 அடி உயரம் வரை பறந்த நிலையில் விபத்தில் சிக்கிய அந்த விமானம் பின்னர் தரையை நோக்கி நிமிடத்துக்கு 475 அடி வேகத்தில் விழுந்ததாகவும் ஃபிளைட் ராடார் 24 நிறுவனம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version