கூட்டணியில் கதர் கட்சி வீம்பு பிடித்தால்..? | உள்குத்து உளவாளி

0
17

நடிகரின் புதிய கட்சி வரவால், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் நெருக்கடி. உடன் இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்ளவும் ஆடித்தள்ளுபடி போல ஆபர்களை அள்ளித்தர தயாராகி விட்டன. ஆளும் கட்சி தரப்பு, ‘எங்கள் அணி உடையாது, வலுவாக இருக்கும்’ என வெளியில் சொல்லிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் விஷயம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதிலும், தேசிய கதர் கட்சிக்காரர்கள், நடிகர் கட்சியை காட்டி காட்டியே கூட்டணி தலைமைக்கு பிரஷரை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசரான முன்னாள் தலைவர் உள்ளிட்ட சிலர், நடிகர் கட்சியோடு கூட்டணிக்கு போவதுதான் நமக்கு நல்லது என்ற ரீதியில் மேலிடத்துக்கு புள்ளிவிவரங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘பிரிய’மான மேலிட தலைவியும் அவர்களின் கருத்துக்கு கண் அசைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதுபற்றிய உளவு தகவலை அறிந்த கூட்டணி தலைமை, கதர் கட்சியின் தலைவர்களான தாயும் மகனும் நமக்குதான் சப்போர்ட்டாக இருப்பார்கள். அதனால், நம்பிக்கையாக இருக்கலாம். இருந்தாலும், நிலைமை கை மீறி போய்விடக் கூடாது என்பதால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொகுதிப் பங்கீடுகளை முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுவிட வேண்டும் எனபதில் தீவிரமாக இருக்கிறார்களாம்.

பிஹார் தேர்தல் முடிந்த கையோடு, இங்கும் பேச்சுவார்த்தையை தொடங்கிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். கதர் கட்சி வீம்பு பிடிக்கும்பட்சத்தில் கூடுதலாக தொகுதிகளை கொடுத்து சரிக்கட்டவும் கூட்டணி தலைமை ஒரு கணக்கு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் இந்த முறை ‘லக்’ அடிக்கும் என்கிறார்கள்.

அதேநேரத்தில், தற்போது தொகுதி வாரியாக ஒன் டூ ஒன் விசாரிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆளும் தரப்பு, வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக இருக்கிறார்களாம்.. மொத்த தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட வேட்பாளர் லிஸ்ட் தயாராகி வருவதாக உடன்பிறப்புகள் தகவல்களை கசிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக தேர்தல் வந்தால், வாக்காளர்களுக்குதான் ஏராளமான ஆபர்கள் கிடைக்கும். ஆனால், இந்த தேர்தலில் கட்சிகளுக்கே ஏகப்பட்ட கிராக்கி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here