போட்டிகளைப் புறக்கணித்த மற்ற கிரிக்கெட் வாரியங்களை ஐசிசி என்ன செய்தது?

0
38

2026 டி20 உலகக்கோப்பை சர்ச்சைகளுக்கென்றே புகழ்பெற்ற உலகக்கோப்பையாகி விடுமோ என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது. வங்கதேசம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது.

அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு பாகிஸ்தான் முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆடமாட்டோம் என்று அரசு அறிவுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐசிசி நீண்ட கால விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியுள்ளது.

இவ்வளவு உதார் விடும் ஐசிசி இதற்கு முன்னால் உலகக்கோப்பைகளில் போட்டிகளை விளையாட மறுத்த கிரிக்கெட் வாரியங்களை என்ன செய்து விட்டது? இப்போது பாகிஸ்தானுக்கு விடுக்கும் எச்சரிக்கை கூட இல்லை. வாளாவிருந்ததைத்தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

சனிக்கிழமையன்று சல்மான் அகா தலைமை பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைக்காக இலங்கைக்கு பிரயாணிக்க பாகிஸ்தான் அரசு அனுமதியளித்தது, ஆனால் தன் சமூக ஊடகப் பதிவில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்காது என்று தெரிவித்திருந்ததாக செய்திகள் எழுந்தன. இந்திய அணி கொழும்பு சென்று ஆடத் தயாராக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிலபல தடைகள் விதிக்கப்படலாம் என்று பிடிஐ செய்திகள் கூறுகின்றன. உதாரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகளுக்கு அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்கத் தடை விதிப்பது, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் கையை வைப்பது ஐசிசி தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் தரநிலையை உறையச் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பிடிஐ செய்திகள் தெரிவித்தன.

இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நீண்ட கால விளைவுகளை எச்சரித்த ஐசிசி முந்தைய போட்டிகள் புறக்கணிப்பில் செய்தது என்ன என்பதைப் பார்த்தோமானால் ‘ஒன்றுமே இல்லை’ என்ற விவரமே நமக்குத் தெரியவரும்.

அரசு அறிவுறுத்தலின் பேரில் ஐசிசிப் போட்டிகளை அணிகள் புறக்கணிப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. 1996 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை சேர்ந்து நடத்தியது, அப்போது குரூப் ஸ்டேட்ஜில் ஆஸ்திரேலியாவும், மே.இ.தீவுகள் அணியும் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஆட மறுத்தது, எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இரு வாரியங்களும் இலங்கைக்கு அணிகளை அனுப்ப மறுத்தன. அப்போது முரண்நகையாக இலங்கை கோப்பையை வென்றது.

அதுவும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி என்பது ஒரு தார்மிக வெற்றி என்றாலும் ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் வாரியத்திற்கு ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை என்பதோடு ஒரு கொள்கை அறிவிப்பாக எச்சரிக்கை எதுவுமோ, கண்டனங்களையோ ஐசிசி தெரிவிக்கவில்லை.

2003 உலகக்கோப்பைப் போட்டிகளின் போது அரசியல் காரணங்களுக்காக இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியைப் புறக்கணித்தது. அதே தொடரில் நியூஸீலாந்து அணி கென்யாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டி நைரோபி செல்ல மறுத்தது.

2009 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை புறக்கணித்தது. அரசாங்க மட்ட கருத்து வேறுபாடுகளால் ஜிம்பாப்வே ஆடவில்லை. இந்த அனைத்துப் புறக்கணிப்புகளிலும் ஐசிசி வாளாவிருந்தது, ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அபராதம் இடவில்லை, எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என்பதுதான் வரலாறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here