மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கில், தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற இடங்களில் ஐ-பேக் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ரிஷி ராஜ் சிங்கின் வீடும் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கரி ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள ஐ.பேக் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் நிறுவனரும் இயக்குநர்களில் ஒருவருமான பிரதீக் ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரியில் சோதனை நடத்தினர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஐ-பேக் நிறுவனம் அரசியல் வியூகம் வகுத்து வந்த நிலையில் இந்த சோதனைக்கு முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் பிரதீக் ஜெயின், ரிஷி ராஜ் சிங் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. நிலக்கரி வழக்கில் நேரில் ஆஜராகி வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு அதில் கூறியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி இவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதை அவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குனால் கோஷ் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களை திசை திருப்பும் முயற்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான இத்தருணத்தில், மத்திய அமைப்புகள் மூலம் எங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்த பாஜக முயன்று வருகிறது.
தேர்தலில் எங்களுக்கு மக்கள் வழங்கும் ஆணையை கண்டு பாஜக நிலைகுலைந்து போகும். எங்கள் கட்சியை துன்புறுத்துவதற்காக இத்தகைய இழிவான தந்திரங்களை எந்த அளவு அவர்கள் கையாளுகிறார்களோ, அந்த அளவுக்கு வங்காள மக்களிடம் இருந்து அவர்கள் அந்நியப்பட்டுப் போவார்கள்” என்றார்.














