கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், போதைப் பொருட்கள் ஆகியவை ட்ரோன்கள் மூலமாக பஞ்சாப் மாநிலத்துக்குள் கடத்தப்படுகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
இதன்மூலம் ட்ரோன்கள் எல்லைப் பகுதிகளில் பறக்கும்போது அவை சுட்டு வீழ்த்தப்படுகின்றன. சில வகை சாதனங்கள் மூலம் ட்ரோன்களின் செயல்பாடு முடக்கப்பட்டு அவை தரையில் வீழ்த்தப்படுகின்றன. ஒரு நாளில் சுமார் 15 ட்ரோன்களை கைப்பற்றி வருகிறோம். இவ்வாறு பஞ்சாப் போலீஸார் தெரிவித்தனர்.