வாடகை ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் விமான நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லமாட்டோம்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

0
110

வாடகை ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் நாளை முதல் விமான எரிபொருளை கொண்டு செல்லமாட்டோம் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எண்ணூர், காமராஜர் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர், டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அண்மையில் புதிய ஒப்பந்தப் புள்ளி கோரியதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் இருந்து 15 சதவீதம் வாடகையை குறைத்து நிர்ணயம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் நிறுவனத்தில் இருந்து நேரடியாக டீலர்கள் கொண்டு செல்லும் சில லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் நாளை (27-ம் தேதி) முதல் விமான நிலையங்களுக்கு விமான எரிபொருளை கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்படும். தண்டையார்பேட்டை பாரத் பெட்ரோலியம் முனையத்தில் இருந்து இயங்கி வரும் 30 டேங்கர் லாரிகள் நிறுத்தப்படும் என பெட்ரோல், டீசல் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here