தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் தொடருவோம்: துரை வைகோ கருத்து

0
174

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் திறம்படச் செயல்பட்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நதி நீர் இணைப்பு தொடர்பாக யாரும் சிந்திக்காத காலத்திலேயே தனி நபர் மசோதா கொண்டு வந்தவர்.

1978-ல் இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசிய அவர், தற்போது 81-வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராகப் பேசினார். 3 முறை மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தபோதும் மறுத்தவர் வைகோ. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் வாய்ப்பு அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அதேநேரத்தில், வைகோவுக்கு பதவி பொருட்டல்ல, அவரது மக்கள் பணி தொடரும்.

நாங்கள் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்தது. எனவே, மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம். ஆனால், இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். இணைந்து பணியாற்றுகிறோம்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும், கட்சித் தலைமையும் முடிவெடுக்கும். ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளோம். தமிழ் மொழிதான் முதல் மொழி என்று கமல்ஹாசன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை, அவர்கள் கட்சி சார்ந்தது. அது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை. பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலம் தமிழகம் என்று கூறிய பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்ற மாநிலங்களுக்குச் சென்று பார்க்கட்டும். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம்தான். இவ்வாறு துரை வைகோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here