ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிரதிகா ராவல் 31 ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் டயானா பெய்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 248 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சித்ரா அமின் 81, நடாலியா பெர்வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த வீராங்கனையும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
போட்டி முடிவடைந்ததும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறியதாவது: ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது ஆலோசனையின்போதும் ஆட்டத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தே ஆலோசிக்கிறோம். ஏனெனில், இந்த உலகக் கோப்பை குறித்து வெளியில் எத்தனை விஷயங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.
வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல், எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணியில் உள்ள ஒவ்வொருவரும் சக வீராங்கனைகளின் வெற்றியை தங்களின் வெற்றியாகக் கருதி கொண்டாடுகிறோம். எங்களது இயல்பான இந்த குணம் அணியை வலுவாக வைத்துள்ளது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்து பேச வேண்டுமென்றால், அணியில் நான் நுழைந்தபோது மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்றோர் எனக்கு மூத்த வீராங்கனைகளாக இருந்தனர். தற்போது ஹர்மன்பிரீத் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள். அணிக்காக அனைவரும் தங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க விரும்பும் சூழலை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளரக் காரணமாக இருந்தவர்களுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம். குவாஹாட்டியில் விளையாடிய முதல் போட்டியும், இப்போது கொழும்பு நகரில் விளையாடிய போட்டியிலும் பேட்டிங்கிற்கு சிறிது சவால்கள் இருந்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினர்.
எனவே அதை நாங்கள் தகவமைத்துக் கொண்டு ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்லும் வகையில், பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தோம். அணியில் உள்ள அனைவரும் வெற்றிக்காக பங்களித்தனர், இறுதியில், ரிச்சா கோஷின் அதிரடி பேட்டிங் வெற்றி பெறுவதற்கான இலக்கை கொடுக்க உதவியது. இவ்வாறு ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறினார்.