தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர இளைஞர்கள் துணை நிற்க வேண்டும். அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்ட இருக்கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், 1,172 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.33.50 கோடி ஊக்கத் தொகைக்கான காசோலைகளையும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நிதியுதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, சென்னையில் முதல்கட்டமாக ரூ.261 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சர்வதேச விளையாட்டு நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற 5,406 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.177.80 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இந்த தொகையை நாம் வழங்கி வருகிறோம். இதிலும் நாம்தான் இந்தியாவுக்கே முன்னோடி.
இதுவரை 241 மாற்றுத் திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.29.67 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,578 வீரர்களுக்கு ரூ.211.39 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன் மூலமாக, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், அவர்கள் சர்வதேச விளையாட்டில் பங்கேற்கவும், இதுதொடர்பான இதர செலவுகளுக்கும், இதுவரை 4,231 பேருக்கு, ரூ.30.21 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவீதம் விளையாட்டு இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டுக்கு முன்பு விளையாட்டு இடஒதுக்கீட்டில் வெறும் 5 பேர்தான் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து 5 மாற்றுத் திறன் வீரர்கள் உட்பட, மொத்தம் 116 பேரை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியமர்த்தி உள்ளோம்.
2021-ம் ஆண்டுக்கு முன்பு, எலீட், மீம்ஸ் மற்றும் சிடிஎஸ் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விளையாட்டு வீரர்கள் 162 பேர் மட்டுமே. அதையும் நாம் வந்து 375 ஆக உயர்த்தி உள்ளோம். தமிழகம் தொடர்ந்து அமைதியான, வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்றால், அது, அரசியல் தலைவர்களான எங்கள் கையில் மட்டும் இல்லை, இளைஞர்களான நீங்களும் எங்களுக்கு துணையாக நிற்க வேண்டும்.
அடுத்து, அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0-ல் இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்டி வர இருக்கிறது. நாங்களும் வென்று வருவோம். நீங்களும் தொடர்ந்து வென்று வாருங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.














