“நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை,” என்று எஸ்ஐஆரை பற்றி ஆட்சியரிடம் புகார் மேல் புகார் வாசித்துவிட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களிடம் தனது அதிருப்தியை கொட்டித் தீர்த்தார்.
மதுரை மேற்கு தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடப்பதாகவும், விண்ணப்பங்களை முழுமையாக தொகுதி மக்களுக்கு வழங்காமல் 100 சதவீதம் கொடுத்ததாக போலி கணக்கு காட்டப்படுவதாக நேற்று செல்லூர் ராஜூ, ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்து முறையிட்டார்.
இதுகுறித்து செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “எஸ்.ஐ.ஆர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம்களில் 40 சதவீதம் தகுதியான பிஎல்ஓ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. சரியாக எழுதபடிக்க தெரியாதவர்களை கடமைக்கு நியமித்து பணிகள் நடக்கிறது. சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஆயாக்கள், தூய்மை பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அவர்களிடமும் எங்கள் கட்சிக்காரர்களும், தொகுதி மக்களிடம் எஸ்ஐஆர் பற்றி விவரங்கள் கேட்டால் எங்களுக்கே எதுவும் தெரியாது என விவரமில்லாமல் பேசுகிறார்கள். விண்ணப்பங்களை இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் நேரடியாக சென்று பொதுமக்களிடம் வழங்கவில்லை. பொதுமக்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிங்கள் முழுமையாக பெறப்படவில்லை.
35 முதல் 40 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திரும்பி வழங்கப்படுகிறது. மீதி விண்ணப்பங்கள் என்ன ஆனது என்பது தெரியவில்லை. எஸ்ஐஆர் ஆப்கள் சரியாக டவுன் லோடு ஆகவில்லை.
மேலும் பிஎல்ஓ-க்கள் அடையாள அட்டை இல்லாமல் பணிபுரிகிறார்கள். ஆட்சியரிடம் இந்த புகார்களை முகாம்கள் நடக்க தொடங்கிய நாள் முதல் சொல்லி வருகிறோம்.
ஆனால், அவரோ எந்த செக்க்ஷனிலும் ஆட்கள் இல்லை, பிஆர்ஓக்களை வைத்து அடையாள அட்டைகளை கொடுக்க சொல்கிறோம், சர்வர் கொஞ்சம் பிராப்ளம்தான், சரியாகதான் முகாம்கள் நடக்கிறது என்று சமாளிக்கிறார்.
‘அய்யா, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை, நீங்கள் நியமித்த ஆயாக்களுக்கும் எதுவும் தெரியவில்லை.
என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று ஆட்சியரிடம் சொல்லிட்டோம். ஆனால், அவரும் அலட்சியமாக இருக்கிறார்.
இறந்தவர்கள் பெயர் இருக்கக்கூடாது, இரட்டை வாக்குரிமை நீக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடக்கிறது.
ஆனால், போகிற போக்கை பார்த்தால் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சிதைகிற அளவிற்கு வாக்குரிமை இருக்கிறவர்கள் பெயர் கூட இல்லாமல் போகலாம் என்ற அச்சம் எங்களுக்கு வந்துவிட்டது.
ஆட்சியர் பயிற்சியே கொடுக்காமல் ஊழியர்களை எஸ்ஐஆர் பணிகளுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், பயிற்சி கொடுத்துதான் அனுப்பியதாக கூறுகிறார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் என்னவென்று எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்களும் மட சாம்பிராணியாக இருக்கிறோம், என்றார்.








