தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம் என்று துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், உயர்கல்வித்துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக உயர்ந்து நிற்கிறது. தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருகிறது. இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நம்முடைய பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக் கழகங்கள் திகழவேண்டும். இதுதான் என் கனவு. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துக்களை கேட்டு, இறுதியில் முதல்வர் பேசும்போது, “மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது’’ என்றார்.














