“நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும்” – அன்புமணி ஆக்ரோஷம்

0
17

சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ஆக்ரோஷமாகப் பேசினார்.

ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பளர் சுகுமார், ராணிப்பேட்டை தொகுதியில் தமாகா வேட்பாளர் கார்த்திகேயன், சோளிங்கர் தொகுதியில் பாமக சரவணன், திருத்தணி அதிமுக ஹரி ஆகியோரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.8 ஆயிரம் கூப்பன் கொடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ளன. திமுக வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு மட்டும் தான் கூப்பன் கொடுக்கும். அந்த கூப்பனை வாங்க திமுகவினருக்கு ரூ.3 ஆயிரம் நாம் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் அதிமுக வெற்றி பெற்றால் பழனிசாமி ரூ.10 ஆயிரம் பணமாக கையில் கொடுப்பார். அது மட்டுமில்லாமல், ஒரு ஃப்ரிட்ஜ் கொடுக்க இருக்கிறார்.

ராணிப்பேட்டையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட சிப்காட்டில் குரோமியம் தொழிற்சாலையின் கழிவுகள் 2.5 லட்சம் டன் அப்படியே தேங்கியுள்ளது. அதனை அகற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராணிப்பேட்டையை சுற்றி இருக்கக்கூடிய மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீரில் குரோமியத்தின் அளவு அதிகரித்துள்ளது இதனால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

ராணிப்பேட்டை பகுதியில் இருக்கும் அமைச்சர் காந்தி இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டாலின் வார்த்தைக்கு வார்த்தை பாஜக, பாஜக என்கிறார். ஏன் பாஜகவை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார். யாராவது தும்மினால் கூட அதற்கு காரணம் பாஜக தான் என்று கூட ஸ்டாலின் சொல்வார்.

எங்கள் கூட்டணியில் மத்திய பாஜக அரசாங்கம் இருப்பதால், தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பழனிசாமி பெற்று கொடுப்பார். எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி போன்றவர்கள் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர். இந்த மோசடி கும்பலை விரட்டி அடிக்க வேண்டும். ஒரு ஊருக்குள் திருடன் வந்தால் எப்படி அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து விரட்டி அடிப்போமோ, அதுபோல நாம் அனைவரும் சேர்ந்து, இந்த தேர்தலில் இந்த திமுக கும்பலை விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here