சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அடையார் இந்திரா நகர் 2-வது அவென்யூவில் குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (நவ.18) இரவு 7 முதல் 19ம் தேதி காலை 5 மணி வரை பள்ளிபட்டு குடிநீர் பகிர்மான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்த செய்யப்படும்.
அதனால், அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட சில இடங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, அடையார் மண்டலம் 169-வது வார்டில் சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி பிரதான சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஸ்ரீநகர் காலனி, ரங்கராஜபுரம், எல்டிஜி சாலை, ஆரோக்ய மாதா நகர், வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். 170, 173, 174, 179, 180, ஆகிய வார்டுகளிலும் சில இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.