எஸ்ஐஆர் என்பது மறைமுகமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி என்றும், அரசியலமைப்பை சிதைப்பது தான் பாஜகவின் எண்ணம் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் சென்னை,எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: பாஜக உள்நோக்கத்துடன் தான் எஸ்ஐஆரை கையாள்கிறது.
பாஜக அரசு அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. விமர்சனங்களை செய்து கொண்டே எதிர்க்கட்சிகள் இதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும் என்கிற நெருக்கடியை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர்.
மோடி, அமித் ஷா சராசரி அரசியல்வாதிகள் அல்ல. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவை அடியோடு புரட்டப் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளைபலவீனப்படுத்துவது, காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிட கட்சிகள் இல்லாத நிலையை உருவாக்குவதுதான் பாஜக செயல் திட்டம். ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் பாஜக தலையிட முடியவில்லை. இன்று பழனிசாமி பாஜகவிடம் கைபிசைந்து நிற்கிறார்.
தேர்தல் தில்லு முல்லு: முதலில் நீ இந்திய குடிமகனா என்று உறுதி செய், பிறகு நீ வாக்காளரா என்று நாங்கள் உறுதி செய்கிறோம் என்பதுதான் எஸ்ஐஆர் நடவடிக்கை. குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகம் தீவிரமாக எதிர்த்தது.
எனவே, மறைமுகமாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தேசிய குடிமக்கள் பெயரேட்டை உருவாக்கவே எஸ்ஐஆர் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தில்லு முல்லுகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கிறது.
தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, துணை பொது செயலாளர் வன்னி அரசு மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.








