தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைப்பு

0
185

தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக பாஜக மாநில மையக் குழு ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில செயலாளர் ராம சீனிவாசன், துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து பூத் அளவிலும், உட்கட்சி தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் கிளை அளவிலான தேர்தல் முடிவுற்ற பிறகு, ஒன்றியம், நகரத் தேர்தல், மாவட்டத் தலைவர் தேர்தல் நடைபெறும். எனவே, வரும் 2025-ம் ஆண்டு தமிழக பாஜகவுக்கு மாபெரும் எழுச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும்.

அதைத்தொடர்ந்து, 2026 தேர்தலிலும் பாஜக பெரிய முத்திரை பதிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. டிச.25-ம் தேதி வாஜ்பாய் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இவ்விழா, புதிய இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாகவும், நல்லாட்சி தினமாகவும் கொண்டாடப்படும். இதற்காக, அகில இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு வாஜ்பாயின் 88-வது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, தமிழகத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு திருமண வைப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கினோம். இந்நிலையில், தற்போது, ஏழைக் குழந்தையின் படிப்பு மற்றும் திருமணத்துக்கு பயன்படும் வகையில், ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி வழங்க இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல், அக்குழந்தைக்கு பிளஸ் 2 வரை படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாஜக மாநிலத் தேர்தலில் ஒத்த கருத்துடன் அனைவரும் ஒரு நபரை தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here