கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வைக்கம் விருது அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

0
147

இந்த ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறி்த்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்கள் கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் சமூகநீதி நாளான செப். 17-ம் தேதி வைக்கம் விருது தமிழக அரசால் வழங்கப்படும். இதனை பேரவையில் 110- விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கிணங்க, 2024-ம் ஆண்டுக்கான “வைக்கம் விருது” கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேவநூர மஹாதேவா ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவர் ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாதெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வைக்கம் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியவற்றை கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here