மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களும், நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் பணியிடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ‘‘ தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் என அனுமதிக்கப்பட்ட 230 பணியிடங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், இரண்டு சுருக்கெழுத்தர் என 13 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள 2 சுருக்கெழுத்தர் மற்றும் 14 இளநிலை உதவியாளர் பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையைப் படித்துப்பார்த்த நீதிபதிகள், நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெருகி வரும் சூழலில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நுகர்வோர் நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா அளவில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜன.23-க்கு தள்ளி வைத்துள்ளனர்.














