Home உலக செய்திகள் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் – போர்நிறுத்த அத்துமீறல்?

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் – போர்நிறுத்த அத்துமீறல்?

0

போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள கடல் பகுதியை ஒட்டி நடந்துள்ளது. இதை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதி செய்துள்ளது. எங்கள் படை வீரர்களின் தற்காப்புக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டி முகாமிட்டிருந்த ஈரான் படையின் ராணுவ தளவாடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த கட்டுப்பாடுகளை பின்பற்றி அமெரிக்க ராணுவத்தினரின் தற்காப்புக்காக மட்டுமே இந்த தாக்குதல் நடந்தது. கடலில் கண்ணிவெடிகளை நூதன முறையில் பதிக்க முயன்ற ஈரான் தரப்பை தாக்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்த பணியில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதையடுத்தே இந்த தாக்குதல் நடந்தது என விவரித்துள்ளது. இப்போது தாக்குதல் அங்கு நிறைவடைந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பந்தர் அப்பாஸ், சிரிக், ஜஸ்க் உள்ளிட்ட ஈரான் நகரங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக ஈரான் ஊடக நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதல் சம்பவங்கள் தெற்கு ஈரான் கடலோர பகுதியில் நடந்துள்ளதை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்தன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது. அதே நேரத்தில் ஈரான் வசம் உள்ள யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இரு தரப்புக்கு இடையிலும் எப்போது உடன்பாடு ஏற்படும் என உலக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அப்போதுதான் உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் என்பதே உலக மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version