கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5% புதிய வர்த்தக வரிகளை விதிப்பதற்கான பரிந்துரையை அமெரிக்கா நேற்று வழங்கியது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (யுஎஸ்டிஆர்) ‘செக்சன் 301’ சட்டப் பிரிவின் கீழான விசாரணைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இடையே டெல்லியில் மிக முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதே வேளையில், கட்டாயத் தொழிலாளர் இறக்குமதியைத் தடுக்க அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் இணையச் சம்மதித்துள்ள பாகிஸ்தான், ஐரோப்பிய யூனியன், கனடா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு 10 சதவீதக் குறைந்தபட்ச வரியை அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே, இந்த வரி விதிப்புக் கொள்கை குறித்துப் பேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், அமெரிக்காவின் இந்த வரி விதிப்புப் பரிந்துரை இன்னும் இறுதியான ஒன்றாக மாறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட கூட்டு உடன்படிக்கையின்படி, இரு நாடுகளுக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
வரும் ஜூன் 22-ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் வர்த்தகப் பங்களிப்பாளர்கள் இது குறித்த பொது விசாரணையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூலை 6 வரை எழுத்துப்பூர்வமான கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7 அன்று நடைபெறும் பொது விசாரணைக்குப் பிறகே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி இதில் இறுதி முடிவை எடுப்பார் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகம் விதித்திருந்த சில பரஸ்பர வரிகளைச் செல்லாது என அறிவித்ததால் முந்தைய வர்த்தக ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழந்தன. அதனை ஈடுகட்டவே தற்போது மிக சக்திவாய்ந்த ‘செக்சன் 301’ சட்டப் பிரிவை அமெரிக்கா கையில்எடுத்துள்ளது.
1995-ல் உலக வர்த்தக அமைப்பு உருவாவதற்கு முன்பு, ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா இதைப் பயன்படுத்தியது. தற்போது உலக வர்த்தக அமைப்பு பலவீனமடைந்து வரும் சூழலில், ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் இந்த கடுமையான சட்டத்தை கையிலெடுத்துள்ளது.
