சென்னை மாநகரில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்கு வந்து செல்கின்றனர். மாநகரமக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதிய கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மாநகரில் தற்போதைய நிலவரப்படி 550-க்கும் மேற்பட்ட இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் மாநகராட்சி நிறுவியுள்ளது. இவற்றில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், 300-க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் வேப்பேரி தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள கழிப்பறை, வட சென்னையில் மகாகவி பாரதி நகர், மத்திய நிழற்சாலை விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை, புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்றும் நிலையத்துக்கு எதிரே அமைக்கப்பட்ட கழிப்பறை, எண்ணூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட கழிப்பறை போன்றவை இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கின்றன. இவற்றுக்கு போதுமான தண்ணீர் வசதி செய்யப்படவே இல்லை. மேலும் ராயபுரம் மண்டலம் சூளை தபால் நிலைய பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள பொதுகழிப்பறை கடந்த ஓராண்டாக புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சூளையை சேர்ந்த மனோகரன் கூறியதாவது: சூளை பேருந்து நிறுத்தத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வந்தது. கடந்த ஆண்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் அந்தபணி கிடப்பில் போடப்பட்டது. அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் வேப்பேரி தீயணைப்பு நிலையம் அருகில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கு வராமல் 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கின்றன. இதனால் பயணிகள், பொதுமக்கள், அந்தந்த பகுதிகளில் இயங்கும் சிறுகடைகளில் பணியாற்றுவோர், சாலையோர வியாபாரிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கைவிடப்பட்ட கழிப்பறை, கட்டி பயன்பாட்டுக்கு வராதகழிப்பறை ஆகியவற்றை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் 975 இடங்களில் 7,166 இருக்கைகள் கொண்ட பொதுகழிப்பறைகளை ரூ.11.67 கோடியில் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே நிறுவப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள கழிப்பறைகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூளை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை முதலில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அங்கு புதிதாக நவீன கழிப்பறை கட்ட கருத்துரு தயாரித்து, ஒப்புதலுக்காக மாநகராட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதிய கழிப்பறை கட்டப்படும்” என்றனர்.