வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம்

0
122

நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து வக்பு சொத்துகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இணையதளம் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார்.

இதனிடையே புதிய வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, “இந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளளது. மேலும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் வக்பு சட்டத்தில் உள்ள சில அம்சங்களை தற்போது செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இது வக்பு வாரிய சொத்துகள் பதிவு மற்றும் எண்மமயமாக்கலை உறுதிப்படுத்தும் என்பதோடு, நிர்வாகம் மற்றும் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமான வக்பு சொத்துகளின் அர்த்தமுள்ள பயன்பாட்டை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு ‘உமீத்’ வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் வக்பு சொத்து விவரங்களை மாநில அரசுகளும் வக்பு வாரியங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து வக்பு சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் விரிவான தகவலுடன் பதிவு செய்யப்படும்.

சலுகைக் காலத்துக்குப் பிறகு பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக கருதப்படும். சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிச்சொற்கள் கொண்ட இடங்கள் உள்ளிட்ட விரிவான விளக்கங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த இணையதளத்தில் ஒரு வக்பு சொத்து பதிவு செய்யப்பட்ட பின்னர் அதற்கு 17 இலக்கங்கள் கொண்ட பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். அந்த எண் மூலம் அந்த சொத்து எந்த மாநிலம், மாவட்டம், தாலுகாவில் உள்ளது, அதன் பரப்பளவு போன்ற விவரங்களை கண்டறியலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொத்துகளை பதிவு செய்வதற்கு 3 அடுக்கு சரிபார்ப்பு செயல்பாடுகள் இருக்கும்.

வக்பு வாரியத்தின் முத்தாவல்லி அல்லது வக்பு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற நபர், வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here