நாடு முழுவதும் பெட்ரோல், சமையல் காஸ் தடையின்றி விநியோகம் செய்யப்படும். விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்கப்படும் என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து உள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலையளிக்கிறது. 3 வாரங்களுக்கும் மேலாக பிரச்சினை நீடிக்கிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய போரால் நமது நாட்டில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.
போரின் எதிர்விளைவாக உலகின் மிக முக்கிய கடல்வழி போக்குவரத்து (ஹார்முஸ் ஜலசந்தி) முடங்கியிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்களில் இந்தியர்கள் பெரும்பான்மையாக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களை பாதுகாக்க பல நாடுகளின் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். போரால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள் கொண்டுவரும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியிருக்கிறது.
இப்போதைய இக்கட்டான காலத்திலும் பெட்ரோல், டீசல், காஸ் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சமையல் காஸ் தேவையில் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் சமையல் காஸ் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
41 நாடுகளில் இருந்து…
கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி ஆகியவை முன்பு 27 நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனை 65 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோலில் 20% எத்தனால்…
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலில் 1.5 சதவீத எத்தனால் கலக்கப்பட்டது. தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்படுகிறது. இதன்மூலம் 4.5 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்திருக்கிறது. நாடு முழுவதும் பெரும்பாலான ரயில் வழித் தடங்கள் மின்சாரமயமாக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக 180 கோடி லிட்டர் டீசல் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.














