ம.பி. சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று ‘டீ கெட்டில்’ எடுத்து வந்து போராட்டம் நடத்தினர்.
ம.பி.யில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ‘டீ கெட்டில்’ உடன் வந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கார் கூறுகையில், “ம.பி.யில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் டீ விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை சுட்டிக்காட்டவே இவ்வாறு போராட்டம் நடத்துகிறோம்.
ம.பி.யில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. மருத்துவர்கள், போலீஸ் எஸ்ஐ மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.52 ஆயிரம் கடன் உள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் நெல், கோதுமைக்கு குறைந்தபட்ட ஆதரவு விலையும் விவசாயிகளுக்கு உரமும் வழங்கப்படவில்லை. பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படவில்லை” என்றார்.
ம.பி. பாஜக தலைவர் வி.டி.சர்மா கூறுகையில், “காங்கிரஸின் இந்தப் போராட்டம் ஒரு அரசியல் ஸ்டன்ட் ஆகும். பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு, மாநிலத்தில் செழிப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் விவாதம் நடத்த முன்வராமல் ஓடி ஒளிகிறது. மசோதாக்களை முடக்கி விவசாயிகள், இளைஞர்கள், மற்றும் பெண்களுக்கு துரோகம் இழைக்கிறது” என்றார்.
 
            

