நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், “நிருபரின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் ‘அதர்ஸ்’ என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், “நிருபரின் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்கக்கேடானவை. பெண் நடிகர்கள் இன்னும் இந்த அநாகரிகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது, தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.














